சென்னை,

பொங்கல்  திருநாள் அன்றைய விடுமுறை நீக்கப்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக காணும் பொங்கல் அன்று விடுமுறை நாளாக பயன்படுத்த திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு காணும் பொங்கல் அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு 17 நாட்கள் கட்டாய விடுமுறை வரை யறுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 14 நாட்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஏகமாக பொருந்தக் கூடியவையாகும்.

எஞ்சியுள்ள 3 விடுமுறை நாட்களை அந்தந்த மாநிலங்களில் பண்பாட்டு சூழலுக்கு ஏற்ப விடுமுறை நாட்களாக தீர்மானித்து கொள்ள வேண்டும்.

அவற்றில் ஒன்று தான் தை முதல்நாள் பொங்கல் அன்று கட்டாய விடுமுறையாக கடை பிடிக்கப்பட்டு வந்தது.

இந்த ஆண்டு, தை முதல் நாள் சனிக்கிழமை வருகிறது. சனி, ஞாயிறு இரு நாட்களும் ஏற்கனவே மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களாக உள்ளன.

இதனால் தை முதல் நாளுக்கான விடுமுறை நாளை மத்திய அரசு ஊழியர்கள் பயன்படுத்திட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது 17 நாட்கள் என்பது 16 நாட்களாக குறைந்து விடுகிறது.

எனவே மத்திய அரசு ஊழியர்கள் தை முதல் பொங்கல் அன்று பயன்படுத்த வேண்டிய விடுமுறை நாளை திங்கட்கிழமை காணும் பொங்கல் அன்று பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.