26ந்தேதி முதல் ரூ.2500 உடன் பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம்! தமிழக அரசு

சென்னை:  தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா ரூ. 2,500 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்த நிலையில், அதற்கான டோக்கன் வழங்கும் பணி 26ந்தேதி  முதல் தொடங்குகிறது..

தைப் பொங்கலையொட்டி, ஜனவரி மாதம்  தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும்  என்றும், கடந்த சனிக்கிழமையன்று (டிசம்பர் 19) அம்மா மினி கிளினிக் மருத்துவமனையைத் தொடங்கி வைத்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி, ஜனவரி 4-ம் தேதியிலிருந்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.2500ம் வழங்கப்படும என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,  தமிழ்நாட்டில் உள்ள 2.06 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா ரூ. 2500 வழங்குவதற்காக ரூ. 5,600 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை  டிசம்பர் 21ந்தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில்,பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கனை 26ம் தேதி முதல் 30 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று  வழங்க வேண்டும்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரூ.2500 ரொக்கம் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் ரூ.2500யை உறையில் வைத்து வழங்கக்கூடாது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை ஜன.4-ம் தேதி முதல் 12-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். விடுபட்ட, அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு ஜன.13-ம் தேதியில் பரிசுத்தொகுப்பு, ரொக்கத்தொகை வழங்க வேண்டும்  என தெரிவித்து உள்ளது.