சென்னை: உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே பொங்கல் பண்டிகை நாளை (14-ந் தேதி) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அறுவடைத் திருநாளான நாளையும்,  நாளை மறுநாள் (15-ந் தேதி) மாட்டுப் பொங்கல் அன்றும்  பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பது குறித்து ஆன்மிக,  ஜோதிட வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். 

தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையும், உத்தராயண புண்யகாலம் எனப்படும் மாதப் பிறப்பு. இவை இரண்டும் சேர்ந்துள்ளதால், பொங்கல் பண்டிகை சிறப்புபெறுகிறது.  ஆடி மாதத்தில் தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.

தை முதல் நாள் அன்று மகர மற்றும் கும்ப லக்னங்கள் காலை 06.00 மணி முதல் 10.00 வரையிலும் இருக்கும், இந்த நான்கு மணி நேரத்தில் எது ஏற்றதோ அதாவது ராகு காலம் மற்றும் எமகண்ட வேளை ஏற்படாமல் இருக்கும் லக்னமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

சுபமுகூர்த்த வேளையான அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் பொங்கல் வைப்பது சாலச்சிறந்தது. இதுவே, சூரியன் உதயமாகும் நேரம். அப்போது, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் படையலிட்டு வழிபடுவது நன்மை பயக்கும். இன்றளவும் கிராமங்களில் அதிகாலையில் பொங்கலிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதற்கு பிறகு காலை 8 மணி முதல் 10 மணி வரையும், 11.35 மணி முதல் 1.30 மணி வரையும் பொங்கல் பானை வைத்து பொங்கல் வைக்கலாம். (ராகு காலம், எமகண்டம் நேரங்களை தவிர்த்துக்கொள்வது நல்லது)

15-ந் தேதி மாட்டுப் பொங்கல் அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் பொங்கல் பானை வைத்து படைக்க உகந்த நேரம் ஆகும். பிறகு, மாலை  4.30 மணிக்கு மேல் மாட்டுப் பொங்கல் வைத்து மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் மாட்டுப் பொங்கலிட்டு மாடுகளை வழிபடலாம்.