சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விலகுவதாக அறிவித்து உள்ளார். பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால், தனது சமுதாய மக்களை எதிர்கொள்ள முடியவில்லை என்று பாமகவை குற்றம் சாட்டி உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. இதன் காரணமாக பாமகவுக்கு 7 லோக் சபா மற்றும் 1 ராஜ்யசபா தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த பாமக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது. எடப்பபாடி கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், அதிமுக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி புத்தகமாக வெளியிட்டு, மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவர்னரையும் சந்தித்து மனு கொடுத்தது.

101% அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம், இனி திராவிட கட்சிகளோடு கூட்டணியே இல்லை என்று வீரவசனம் பேசி, மக்களை முட்டாளாக்கிய பாமக தற்பொழுது, தனது சொந்த லாபத்துக்காக கட்சியை அதிமுகவிடம் அடகு வைத்துள்ளது.

பாமகவுன் இந்த முடிவை எதிர்த்து,  பாமக இளைஞர் அணி மாநில செயலாளராக  இருந்த ராஜேஸ் வரி, பாமக துணைத்தலைவர் நடிகர் ரஞ்சித் உள்பட பலர் ஏற்கனவே விலகிவிட்ட நிலையில், தற்போது அக்கட்சியின் துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விலகியுள்ளார்.

தான் விலகியது ஏன் என்று விளக்கம் அளித்துள்ள மணிகண்டன்,  அதிமுகவுடன் திடீரென பாமக  கூட்டணி அமைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியையும், எடப்பாடி பழனிச்சாமியையும் கேவலமாக விமர்சித்துவிட்டு இப்போது எப்படி அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்கள் என தெரியவில்லை என்று பாமக தலைமை மீது கடுமையாக சாடினார்.

தான் பாமகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு சென்றேன் ஆனால் மக்கள் அனைவரும் அதிமுக பாமக கூட்டணி குறித்து கேவலமாக பேசுகிறார்கள். அதிமுக – பாமக கூட்டணி  பண பேரக் கூட்டணி என்றும்,  அதிமுகவை எதிர்த்து பல புத்தங்களை வெளியிட்டு விட்டு அந்த கூட்டணியில் சேர்ந்துள்ள மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று கூறினார்.

ராமதாஸ் அரசியலுக்கு வந்த பின்னரே தமிழகத்தில் பேரம் என்பது உருவானது  என்று குற்றம் சாட்டியவர்,  அதிமுக மீது ஊழல் புகார் குறித்து வெளியிட்ட அந்த புத்தக்கத்தில் உள்ளதற்கும்,  இப்போது பிரச்சாரத்தில் பேசுவதற்கும் சம்மந்தமே இல்லாமல் இருக்கிறது… இதன் காரணமாக தனது சமுதாய மக்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியவில்லை. எனவே தான் பாமகவில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார்.