பொன்மகள் வந்தாள் – சிந்திக்க வைக்க வந்த சித்திரம் – திரைப்பட விமர்சனம்

ஜே ஜே பெடெரிக் இயக்கத்தில் அண்மையில் அமேசான் ப்ரைம் மூலம் வெளியான படம் தான் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன், சுப்பு பஞ்சு போன்ற சினிமா உலகத்தின் நட்சத்திர பட்டாளமே உள்ளது.

இது முழுக்க முழுக்க நீதிமன்ற காட்சிகள் கொண்ட படம் என்றே சொல்லலாம். இந்த படத்தை, பல படங்களின் தழுவல் என்றே பலர் கூறுகின்றனர்…என் பொருட்டு நானும் குறை வைக்காமல் எனக்கு தெரிந்த இரண்டு படங்களின் “A Time to Kill” என்ற ஜான் க்ரிஷம் நாவலை தழுவிய படம் என்றும், “A Few Good Men” என்ற படத்தின் கோர்ட் ரூம் காட்சிகளை தழுவிய படம் என்றும் கூற தோன்றுகிறது. தழுவலில் எந்த பிழையும் இல்லை, அதை எப்படி சொல்ல வேண்டும் என்று எண்ணி… அதில் எந்த சமரசமும் இல்லாமல் படமாக்குவதில் தான் வெற்றி. நாட்டு நடப்புக்களை பிரதிபலிக்கும் ஊடகமாகவே படங்கள் அன்றும் இருந்திருக்கிறது, இன்றும் இருக்கிறது. அது தவறா சரியா என்பது விவாதத்திற்குட்பட்டது. படம் பார்ப்பவர்களை பொழுதுபோக்கில் மட்டும் ஆழ்த்திவிடாமல், சிந்திக்கவும் வைக்கும் விதமாக இந்த படம் அமைந்திருப்பது ஒரு சிறப்பு. பல ஆண்டுகள் கைதேர்ந்த ஒருவர் எழுதிய கதை வசனம் போல், முதல் படத்திலேயே கையாண்டது ஜே ஜே பெடெரிக் கிற்கு மேலும் மெருகூட்டுகிறது. எதிர்பார்க்காத பல இடங்களில் திருப்பங்களை கொண்டுவந்து, சலிப்புத் தட்டாமல் படம் மெல்ல நகர்வதை காண முடிகிறது. ஒளிப்பதிவு ராம்ஜி ஊட்டியை இந்த கோடையிலும், குளிரக் குளிர காட்டியிருக்கிறார். கோவிந்த் வசந்தா வின் இசை கதையோடு கலந்த ஒன்று.

கதைச் சுருக்கம்:
2004 ல் ஊட்டியில், பல பெண் குழந்தைகளை கடத்தி கொடூர முறையில் ஜோதி என்ற பெண் கொன்றாள் என்ற குற்றச்சாட்டுடன் அந்த பெண்ணை தேடி சுட்டுக் கொன்றுவிடுகின்றனர் காவல்துறையினர். ஒரு முறை, ஒரு பெண் குழந்தையை கடத்தி செல்லும் போது தடுக்க வந்த இரண்டு இளைஞர்களையும் சுட்டுக் கொன்றாள் என்றும் வழக்கில் பதிவாகியிருக்கும். பெட்டிஷன் பெத்துராஜ் என்ற கதைப்பாத்திரத்தில் நடிக்கும் பாக்கியராஜ், பதினைந்து ஆண்டுகள் கழித்து அதே வழக்கை உயர் நீதிமன்றத்தில் திரும்பவும் விசாரிக்க விண்ணப்பிக்கிறார். என்கௌண்ட்டர் செய்யப்பட்ட பெண்ணிற்காக, தம் முதல் வழக்கில் வாதாட வருகிறார் ஜோதிகா; அரசு தரப்பில் ஆஜராகிறார் அனுபவமிக்க ஆணவம்படைத்த பார்த்திபன். இருவருக்குமான வாதங்களே படம். இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டதா என்பதே கதை.

இது சொல்லப்படாத கதை இல்லை. பல முறை சொன்னாலும் அதே தவறுகள் நடப்பதை பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் தான் இருக்கிறோம் என்ற, ஓலம். பல இடங்களில், குறிப்பாக, பாக்யராஜ் ஜோதிகா இருவரும் தங்களின் வலியை பரிமாறிக்கொள்ளும்போதும், ஜோதிகா தன் மகளிடம் அன்பை பகிர்ந்துகொள்ளும்போதும் சரி, நெஞ்சம் நெருடுகிறது. வலி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கப்போவதில்லை, ஆனால் எவர் ஒருவர் மற்றவர் வலியை தம் வலி போல் உணர்ந்து வாழ்கின்றாரோ…அவரே மனிதன், அதுவே மனிதம். பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இன்றைய பெற்றோர்கள் ஏனோ தம் ஆண் பிள்ளைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த தவறுகிறார்கள், எவருக்கு பணம் , பதவி, பட்டம், இருக்கிறதோ…சட்டம் அவர்களுக்கு வளைந்து கொடுக்கிறது, ஏழை எளியவர்களை வாட்டி வதைக்கிறது போன்ற பல சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை இந்த படம் சுட்டிக்காட்டுகிறது.

பத்திரிகை டாட் காமின் தீர்ப்பு (Verdict) :
சிறு சிறு பிழைகள் இருப்பினும், சொல்ல வந்த செய்தி பெரிது…அதை எவராலும் மறுக்கமுடியாது . மொத்தத்தில் சமுதாயத்தில் மாற்றத்தை விரும்பும் அனைவரும் பார்க்கவேண்டிய நல்ல படம்.