புதுக்கோட்டை:

பொன்னமராவதியில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட கலவரம்  தொடர்பாக சுமார் 1000 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.   வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை.

பொன்னமராவதியில் கடந்த 18ந்தேதி மாலை வாக்குப்பதிவு சமயத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது பின்னர் கலவரமாக மாறி, ஒரு சமூகத்தினர் வீடுகள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர்.

இதற்கிடையில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி வாட்ஸ்அப்பில் செய்திகள் பரவ விட்டதால், மேலும் கலவரம் ஏற்பட்டது.  இதையடுத்து,  வாட்ஸ்அப் ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று மற்றொருதரப்பினர், பொன்னமராவதி காவல்நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது,  போலீஸ் வாகனங்களும் தாக்கப்பட்டன.

வர்களுடன் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி அவதூறாகப் பேசியவர்கள் கைது செய்யப்படுவர் என அவர் உறுதியளித்தார். அதனை ஏற்று போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். பொன்னமராவதிக்கு வரும் சாலைகள் அனைத்திலும் பனைமரம் உள்ளிட்ட மரங்களை வெட்டிப்போட்டு தடை ஏற்படுத்தினர். வன்முறை சம்பவங்களும் ஆங்காங்கே நடந்ததால் பொன்னமராவதி நகரில் கடைகள் அடைக்கப்பட்டன.

இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் சமூக தலைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.  தொடர்ந்து  பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

இதையடுத்து,  வன்முறையில் ஈடுபட்டதாக வீடியோ ஆதாரத்தை கொண்டு, சுமார் 1000 பேர மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அந்த பகுதியில் சென்ற அரசு பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டதால், பொன்ன மராவதி முழுவதும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 300 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற ஆய்வு நடத்திய  ஆட்சியர் உமா மகேஸ்வரி, பொன்னமராவதி தாலுகாவிற்கு உட்பட்ட 49 ஊராட்சிகளில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும்,  வாட்ஸ்அப் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.