லட்சக்கணக்கான வாசகர்களை ஈர்த்திருக்கும் கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவல், தற்போது படக்கதை தொடராக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இதில் கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால்,  பருவ இதழ்களில் இது வெளியாகவில்லை. தனி புத்தகங்களாகவே  வெளிவந்துகொண்டிருக்கிறது.

ஐந்து பாகங்களைக் கொண்ட பிரம்மாண்டமான நாவல் பொன்னியின் செல்வன். இதன்  முதல் பாகத்தின் முதல் இரண்டு அத்தியாயங்களான ஆடித் திருநாள், ஆழ்வார்க்கடியான் நம்பி ஆகியவை  தற்போது  படக்கதைகளாக வெளியாகி உள்ளன.

பி.எஸ்.என். எண்டர்டெய்ண்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற டிஜிட்டல் நிறுவனத்தின் கிளை நிறுவனங்களில் ஒன்றான  நிலா காமிக்ஸ் இந்த பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து நிலா காமிக்ஸ் நிறுவனர் சரவணராஜாவை தொடர்புகொண்டு பேசினோம்.

சரவணராஜா

“பொன்னியின் செல்வன் நாவலை காமிக்ஸ் தொடராக வெளியிடும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?”

“தமிழில் முதன் முதல் படக்கதை புத்தகத்தை  அறிமுகப்படுத்தியவர் பாரதி. அதாவது முழுக்க கார்டூன் பத்திரிகையாக  சித்ராவளி என்ற பத்திரிகையை உருவாக்கினார்.  அதன் பிறகு இடைவெளிவிட்டு, படக்கதை புத்தகங்கள் தமிழில் தொடர்ந்து வெளியாகின. வெளிவந்துகொண்டிருக்கின்றன.

அதே நேரம், வரலாற்று நாவலை தொடர் சித்திரக்கதையாக வெளியிடும் முதல் நிறுவனம் எங்களது நிலா தான்.

“பொன்னியின் செல்வன்” நாவலை அனிமேஷன் சினிமாவாக  உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இதற்கான பணியை ஓவியர் மு. கார்த்திகேயன் தலைமையிலான அனிமேஷன் அணி இரண்டு வருடங்களாக செய்து வருகிறது. இதை முழுமையாக செய்து முடிக்க இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும்.

இந்த ஒன்றரை மணி நேர அனிமேஷன் படத்தை உருவாக்க சுமார் 140  அனிமேசன் கலைஞர்கள் தேவைப்படுவார்கள்.

இதற்கிடையில் நாங்கள் உருவாக்கி வரும் அனிமேஷன் திரைப்படத்தில் இருக்கும் படங்களை வைத்து காமிக்ஸாக வெளியிட்டால் என்ன என்று யோசித்தோம். அப்படி உருவானதுதான் இந்த பொன்னியின் செல்வன் காமிக்ஸ் வரிசை.”

“இந்த நாவலை காமிக்ஸாகவோ திரைப்படமாவோ உருவாக்குவது மிகச் சவாலான விசயம். இதை திரைப்படமாக எடுக்க முயன்று கைவிட்ட ஜாம்பவான்கள் உண்டு. இந்த நிலையில் அனிமேஷன் படமாக உருவாக்குவதில் உங்களுக்கு இருந்த சவால்கள் என்னென்ன..?”

“ஆமாம்.. பெரும் சவால்தான்! முதல் சவால், பொன்னியின் செல்வன் நூலின் நீளம்.

புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என ஐந்து பெரிய  பாகங்கள். முந்நூறுக்கும்  மேற்பட்ட அத்தியாயங்கள்.  சுமார் 2400 பக்கங்கள்.

இதில் நாற்பதுக்கும் மேற்பட்ட முக்கிய  கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பெரும்  கதையை காமிக்ஸ் வடிவத்திற்கு ஏற்றபடி சுருக்கி, அதனை ஃப்ரேம்களாகப் பிரிப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது.

அதே போல கதாபாத்திரங்களின்  முக அமைப்பு மற்றும்  உடலமைப்பை தீர்மானிப்பதும் சவாலாக இருந்தது. ஏனென்றால்,  இந்த நாவலின் கதாபாத்திரங்கள் ஏற்கெனவே ஓவியங்களாக மக்களிடையே புகழ் பெற்றவை. மக்கள் மனதில் பதிந்திருக்கும் அந்த பிம்பங்களை மாற்றக்கூடாது.. அதே நேரம் புதுமையாகவும் இருக்க வேண்டும். ஆகவே மிகக்  கவனத்துடன் செயல்பட்டு கதாபாத்திர உருவங்களை உருவாக்கினோம்.

இந்த காமிக்ஸிற்கென புதிதாக ஒரு எழுத்து வடிவத்தையும் நிலா காமிக்ஸ் வடிவமைத்துள்ளது.”

“முதல் இரு அத்தியாயங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?”

“மிக நன்றாக இருக்கிறது. மக்கள் ஆர்வத்துடன் வாங்கிப் படிக்கிறார்கள். குழந்தைகளை ஈர்க்க வேண்டும் என்பதோடு, ஏற்கனவே படித்தவர்களும் ரசிக்கும்படி உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். அது நடந்திருக்கிறது. பெரியவர்களும்கூட ஆர்வத்துடன் படித்து எங்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துவருகிறார்கள்.

அடுத்தடுத்த அத்தியாயங்கள் எப்போது வெளிவரும்?

பொன்னியின் செல்வன்  முதல் பாகத்தில்  25 அத்தியாயங்களை காமிக்ஸாக தயார் செய்துவிட்டோம். அவை இரண்டு வரங்களுக்கு ஒன்றாக தொடர்ந்து வெளிவரும்.