இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. முதல் அலையை விட தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனால் திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள், மருத்துவர்கள் என ஏராளமானோர் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பூஜா ஹெக்டே, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பல்ஸ் ஆக்ஸிமீட்டரைப் பயன்படுத்துவது எப்படி என்ற தகவலை ஷேர் செய்துள்ளார்.

அந்த வீடியோவில் முதலில் உங்கள் கைகளை நன்கு சுத்தப்படுத்திய பின்னர் ஒரு 5 நிமிடங்களுக்கு பிறகு நடு விரலில், ஆக்ஸிமீட்டரை பொறுத்த வேண்டும். இப்போது அந்த விரலை உங்கள் இதயத்தின் அருகே கொண்டு சென்று சில நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து விட்டு பின்னர் ஆக்ஸிமீட்டரை எடுத்து பார்க்க வேண்டும். அதில் இருக்கும் அதிகபட்ச எண்ணிக்கையை கணக்கிட வேண்டும் என கூறியுள்ளார். இது அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களால் கற்பிக்கப்பட்டதாக பூஜா குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவில், இது உங்களுக்கு மிகவும் உதவும் என்று நம்புகிறேன். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்த போது, ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்க இது பெரும் உதவியாக இருந்தது என்று பூஜா ஹெக்டே குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.