குறைந்த இலக்குதான்; ஆனால் ஆஸ்திரேலியாவை கலங்கடித்த பூனம் யாதவ்..!

மெல்போர்ன்: பெண்கள் டி-20 உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியில், நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வென்றுள்ளதையடுத்து, பலரின் கவனமும் ஒரு இந்திய வீராங்கனையின் பக்கம் குவிந்துள்ளது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் பூனம் யாதவ்தான் அந்த வீராங்கனை. முதலில் களமிறங்கிய இந்திய அணி வெறும் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

எனவே, வலுவான ஆஸ்திரேலிய அணி, அந்த இலக்கை எளிதாக எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எளிய இலக்கை, கடின மலையான மாற்றிவிட்டார் பூனம் யாதவ்.

அவர், வெறும் 19 ரன்களேக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுதான், ஆட்டத்தை இந்தியாவிற்கானதாக மாற்றிய முக்கிய நிகழ்வாகும்.

ஆஸ்திரேலியாவின் அலிஸா ஹீலி, ரேச்சல் ஹெய்னஸ், எலிஸ் பெர்ரி மற்றும் ஜெஸ் ஜொனசென் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை இவர் காலி செய்ததுதான் எதிர்பாராத திருப்புமுனையாக அமைந்தது.

அதேசமயம், இந்தப் போட்டியில் இவர் ஹாட்ரிக் வாய்ப்பை தவறவிட்டது ரசிர்களுக்கு ஏமாற்றமாகவும் அமைந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு மிக மிக முக்கியப் பங்காற்றிய இவரை, பல முன்னாள் வீரர்களும் நெட்டிசன்களும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்!