பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு: தமிழக அரசை எச்சரிக்கும் மத்திய ஜல்சக்தி துறை

டெல்லி: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று மத்திய ஜல்சக்தி துறை மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் பல இடங்களிலும் தொடர்மழை பெய்து வருகிறது. அதி தீவிர புயலாக மாறிய நிவர் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது என்று  வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று மத்திய ஜல்சக்தி துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஜல்சக்தி துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: ஆந்திராவின் சித்தூர் நகரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும். அவ்வாறு நீர்மட்டம் உயரும் பட்சத்தில், கண்டிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.