திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  பூண்டி ஏரி முழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளதால், ஏரியில் இருந்து,  இன்று மாலை 5 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று அதிகாலை 2.30 மணிக்கு முழுவதுமாக கரையை கடந்தநிவர் புயல் காரணமாக, சென்னை புதுச்சேரியில் கனத்த மழை பெய்தது. கடந்த 3 நாட்களாக பெய்த மழை  ஓய்ந்து, இன்று சூரியன் தலைகாட்டி உள்ளது. இதற்கிடையில் தமிழகத்தை விட்டு அகன்ற நிவர்புயல் ஆந்திர மாநிலத்தைச் நோக்கி சென்றது. இதனால், அங்கு கனமழை கொட்டியது. இதனால், பாதுகாப்பு கருதி, அங்குள்ள அணைகள்  திறக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியேறும் நீர்,  திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரிக்கு வந்துகொண்டிருக்கிறது.

தற்போதைய நிலையில்  நீர்வரத்து வினாடிக்கு 15ஆயிரம் கன அடி வீதமாக உள்ளது. இதனால் 35அடி  உயரம்கொண்ட பூண்டி ஏரியில் தண்ணீரின் நீர்மட்டம் 33.6 அடியை தாண்டியுள்ளது.  தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருப்பதால், ஏரியின்  நீர் மட்டம் மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே பாதுகாப்பு கருதி, இன்று மாலை 5 மணி அளவில் ஏரியில் இருந்து உபரி நீர்  கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படவுள்ளது. முதல்கட்டகமாக  வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் வரை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.