நியூயார்க்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஏழை நாடுகள் கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை.

ஐக்கிய நாடுகள் சபையின் துணை தலைவர் அமினா முகமது இதுகுறித்து கூறியதாவது, சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால், உலகளவில் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்து நின்றுள்ளன. குறிப்பாக ஏழை நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் வளர்ச்சியடைந்த நாடுகள் திணறி வருகின்றன.

இதனால், அவை, ஏழை நாடுகளுக்கு எப்படி உதவும் என்று தெரியவில்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏழை நாடுகள் கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது.

இதைத் தவிர்ப்பதற்கு சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த, நீடித்த திட்டம் தேவை. காலநிலை மாற்றத்தை சமாளிக்க நடவடிக்கை எடுப்பதிலும், ஏற்ற, தாழ்வுகளை சரி செய்வதிலும், வறுமையை ஒழிப்பதிலும், உலகம் ஏற்கனவே பின்தங்கியுள்ளது.

இப்போது, இதில் கொரோனா தொற்றும் சேர்ந்துள்ளது. இவற்றிலிருந்து உலகை மீட்டு, ஏழை நாடுகள் மற்றும் பூமியை காப்பாற்ற, நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம்” என்று பேசினார் அவர்.