ஆதார் இல்லாத ஏழைப்பெண்ணுக்கு கருச்சிதைவு செய்ய அரசு மருத்துவர் மறுப்பு

ண்டிகர்

தார் இல்லாத்தால் ஒரு வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு கருச்சிதைவு செய்ய அரசு மருத்துவர் மறுத்துள்ளார்.

சண்டிகர் நகரில் வசித்து வரும் ஒரு ஏழைப்பெண் வீட்டு வேலை செய்து பிழைப்பை நடத்தி வருகிறார்.   அந்த பெண்ணின் கணவர் குடிப்பழக்கத்தினால் வீட்டை சரியாக கவனிப்பதில்லை,  அந்தப் பெண்ணுக்கு 28 வயதாகிறது.   அத்துடன்  அவருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன.   அந்த குழந்தைகளை வளர்க்க அவர் கடுமையாக உழைத்து வருகிறார்.

இந்நிலையில் அப்பெண் மீண்டும் கருவுற்றுள்ளார்.  இன்னொரு குழந்தையை தன்னால் வளர்க்க முடியாது என்பதால் அரசு மருத்துவமனைக்கு சென்று கருச்சிதைவு செய்துக் கொள்ள முயன்றுள்ளார்.  அவரிடம் ஆதார் எண் இல்லாததால்  மருத்துவர்கள் அவருக்கு கருச்சிதைவு செய்ய மறுத்துள்ளனர்.    தனக்கு கருச்சிதைவு மாத்திரைகளாவது தருமாறு பெண் கெஞ்சி உள்ளார்.   அதுவும் கிடைக்கவில்லை.

அதனால் அவர் கல்வி பயிலாத ஒரு மருத்துவச்சியிடம் சென்று கருச்சிதைவு செய்துக் கொண்டுள்ளார்.    அவருக்கு சரிவர கருச்சிதைவை அந்த மருத்துவச்சி செய்யவில்லை.    அதனால் ரத்தப் போக்கு அதிகமாகி அவர் உயிருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.  அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விவகாரம் சண்டிகர் நகரில் பெரும் சர்ச்சைக்குண்டாகியது.  இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.    ஒரு பெண் கருச்சிதைவு செய்துக் கொள்ள ஆதார் அவசியமில்லை எனவும் அவருடைய கணவரின் அனுமதி இல்லாததால் தாம் கருச்சிதைவு செய்ய மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.