ஆண்டுக்கு ரூ.6 கோடி செலவு செய்யும் ‘ஏழை கவர்னர்’ கிரண் பேடி.. கலகலக்கும் புதுச்சேரி…

புதுச்சேரி:

புதுச்சேரி மாநில ஆளுநர்  பதவி வகித்து வரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான  கிரண் பேடி, ஆண்டுக்கு சுமார் 6 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளது  தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் வெளியாகி உள்ளது.  இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏழைகளுக்கு ரேசன் அரிசி, இலவச மின்சாரம் உள்பட அனைத்து விதமான விலையில்லாத சேவைகளை வழங்க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் ஏழை கவர்னரான கிரண்பேடி, ஆண்டுக்கு சுமார் 6 கோடி ரூபாய் வரை ஆடம்பரமாக செலவு செய்துள்ளது, மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுவை துணைநிலை ஆளுநராக கிரண்பேடி கடந்த 2016ம் ஆண்டு மே 29ம் தேதி பதவியேற்றார். பாஜக ஆதரவாளரான  கிரண்பேடி பதவியேற்ற பிறகு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பல்வேறு குடைச்சல்களை கொடுத்து வருகிறார். அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்காமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளில் மூக்கை நுழைத்து, மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

அங்கு, இன்றுவரை  அதிகார மோதல் நீடித்துவருகிறது. அரசுத்துறைகள் அனைத்திலும் தேவை யில்லாமல் ஆய்வுகள் செய்வதாக கூறி பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி வருவதை தொடர்கதையாக மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கவே கடந்த 2016-ம் ஆண்டு சென்டாக் அலுவகலத்தில் ஆய்வு நடத்திய கிரண்பேடி, `தனியார் மருத்துவப் படிப்புக்கான சீட் வழங்குவதில் முறைகேடு நடக்கிறது என்று, சிபிஐ மூலம் ரெய்டு நடத்த உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்தே வருகிறது. புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள மல்லாடி கிருஷ்ணராவ், ஆளுநரின் தலையீட்டுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருவதுடன், கிரண்பேடியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

சமீபத்தில், ஏழைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரேசன் அரிசி நிறுத்தப்பட்டு, அதற்கான பணம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிரான நிலை எடுத்தார். அதுபோல,  தொகுதியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆளுநர் அனுமதி கொடுக்கா விட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில், புதுச்சேரி மாநிலம், கடுமையான நிதிச் சிக்கலில் சிக்கித் தவித்து வருவதால், ஆட்சியாளர்கள் சிக்கன நடவடிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று தெரிவித்திருந்தார் கிரண் பேடி.

மாநில அரசு நிதிச்சிக்கலில் சிக்கியிருப்பதாக கூறும் கிரண்பேடியோ, ஆண்டுக்கு ரூ.6 கோடி வரை  ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளது, ஆர்டிஐ தகவல்கள் மூலம் அம்பலமாகி உள்ளது.

புதுச்சேரியில் இதுவரை ஆளுநர்களாக பதவி வகித்தவர்களைவிட, கிரண்பேடி பதவி ஏற்ற பிறகு, ஆளுநர் மாளிகையின் செலவு இரு மடங்காக உயர்த்தப்பட்டு இருப்பதாக மாநில அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருக்கிறார்.

கிரண்பேடி குடியிருந்து வரும், புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு,  ஆண்டுதோறும் செலவிடப்படும் நிதி விவரத்தைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்று அமைச்சர் வெளியிட்டு உள்ளார்.

இதன் விவரத்தை பார்ப்போர் தலைசுற்றும் அளவுக்கு பணம் தண்ணீராக செலவு செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

தனி ஒரு பெண்மணியான கிரண்பேடி, பதவியேற்ற தொடக்கத்தில் ஆண்டுக்கு சுமார் 3 கோடி ரூபாய் வரை செலவு செய்த நிலையில், சமீப சில ஆண்டுகளாக ஆண்டுக்கு சுமார் 6 கோடி ரூபாய் வரை செலவு செய்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார்.

ஆர்டிஐ மூலம் பெறப்பட்டுள்ள தகவலை  புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வெளியிட்டுள்ளார். அதன்படி,

2010-2011 – ரூ. 3.09 கோடி,  2011-2012 – ரூ. 2.91 கோடி,  2012-2013 – ரூ. 3.82 கோடி,  2013-2014 – ரூ. 3.50 கோடி,  2014-2015 – ரூ. 3.55 கோடி,  2015-2016 – ரூ. 3.27 கோடி,  2016-2017 – ரூ. 4.07 கோடி,  2017-2018 – ரூ. 4.87 கோடி,  2018-2019 – ரூ. 6.04 கோடி,  2019-2020 – ரூ. 6.19 கோடி

செலவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை மக்களுக்கு இலவச அரிசிகூட வழங்க மறுத்த ஏழை ஆளுநர் கிரண் பேடியோ, வருடத்திற்கு ரூ.6 கோடி ரூபாய், அதாவது மாதத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.50 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.

கிரண்பேடியின் ஆடம்பரமான செலவு, புதுச்சேரி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி