சூடான் தலைவர்களின் கால்களில் விழுந்த போப்பாண்டவர்!

வாடிகன்: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்க வேண்டி, தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர், கிளர்ச்சிக்கார தலைவர் ரெய்க் மச்சார் மற்றும் இதர 3 துணை அதிபர்களின் கால்களில் விழுந்து வேண்டிக்கொண்டுள்ளார் போப் ஃபிரான்சிஸ்.

இவர்கள் அனைவரும் சூடான் உள்நாட்டுப் போரில் சண்டையிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போப்பாண்டவர் விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது, “நீங்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டுமாய், ஒரு சகோதரனாக கேட்டுக் கொள்கிறேன். நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டுமென என் இதயத்திலிருந்து கோருகிறேன்.

பல பிரச்சினைகள் இருந்தாலும், அவை நம்மை மீறி செல்லாது. உங்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள்” என்றுள்ளார்.

கால் வலியால் அவதிப்பட்டுவரும் 82 வயதான போப்பாண்டவர், மிகவும் கடினப்பட்டு மண்டியிட்டு, அந்தத் தலைவர்களின் கால்களை முத்தமிட்ட செயலால், சம்பந்தப்பட்ட தலைவர்கள் திகைப்பில் உறைந்ததுடன், உலகமே பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.

வடக்கு சூடானின் அதிபர் ஒமர் அல் பஷீரின் ஆட்சி ராணுவப் புரட்சியின் மூலம் அகற்றப்பட்டதையடுத்து, தெற்கு சூடானுடனான அமைதி ஒப்பந்தம் முறியும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், போப்பின் இந்த செயல் முக்கியத்துவம் பெறுகிறது.

– மதுரை மாயாண்டி