யாங்கன்:

மியான்மரில் பவுத்த மதத்தினர் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வந்த ரோஹிங்கியா இஸ்லாமிய மக்களில் பலர் ராணுவ கொடுமைக்கு ஆளாகினர். இதனால் மியான்மரில் இருந்து 6.20 லட்சம் பேர் தப்பி வங்காளதேசத்தில் தஞ்சமடைந்தனர்.

ரோஹிங்கியா மக்கள் ராணுவத்தினரால் கொலை, பாலியல் பலாத்காரம், வன்கொடுமை மற்றும் வலுகட்டாயப்படுத்தி இடம்பெயர்தல் போன்ற துன்புறுத்தல்களுக்கு ஆளாகினர் என மனித உரிமைகளுக்கான சர்வதேச அமைப்பு குற்றம் சாட்டியது. இந்நிலையில் போப் பிரான்சிஸ் மியான்மர் நாட்டின் யாங்கன் நகருக்கு இன்று வந்து சேர்ந்தார்.

அவர் வங்காளதேசத்திற்கும் செல்ல இருக்கிறார். மியான்மரில் உள்ள 5.1 கோடி மக்கள் தொகையில் 7 லட்சம் பேர் ரோமன் கத்தோலிக்க மக்கள். போப் பிரான்சிசை சந்திக்கும் ஆவலில் பலர் யாங்கன் நகரில் குவிந்துள்ளனர்.