நடிகர் சரத்குமாரின் மகளும், பிரபல நடிகையுமான வரலட்சுமி இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார். இதையடுத்து அவர் அ.தி.மு.க.வில் இணைய இருக்கிறார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

பெண்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக, நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒரு கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்தார் . மார்ச் மாதம் சென்னையில்  #saveshakti என்ற ஹேஷ்டேக்குடன் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகத் தனது பிரசாரத்தை நடத்தி வருகிறார்.  பிரபல நடிகர்கள் பலர் இந்தக் கையெழுத்து இயக்கத்தில் பங்குபெற்றனர்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இந்த கையெழுத்து இயக்க துவக்க நிகழ்வு நடந்தது. இந்த கையெழுத்து இயக்கம்குறித்து, மாநில அரசுக்கு ஒரு மனுவாகக் கொடுக்கவிருப்பதாக  நடிகை வரலட்சுமி  ஏற்கெனெவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இதையடுத்து வரலட்சுமி அ.தி.மு.க.வில் இணைய இருக்கிறார் என்ற தகவல் பரவியுள்ளது.

கடந்த வருடம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, ஜெயலலிதாவுக்காக கேரள கோயில்களில் வரலட்சுமி தனது தாயாருடன் சென்று சிறப்பு பூஜைகள் நடத்தினார்.

அப்போதே, “ஜெயலலிதா மீது எனக்கு மிகுந்த பற்று உண்டு. அவர் நலம் பெற்று வந்து தமிழகத்தை தொடர்ந்து பற்பல ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும்” என்று வரலட்சுமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“வரலட்சுமியின் தந்தை சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை நடத்தி வரும் நிலையில் அவரது மகள் இன்னொரு கட்சியில் சேருவாரா” என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

அதே நேரம், “சரத்குமார் தனிக்கட்சி நடத்தினாலும் அதை அ.தி.மு.க.வின் கிளைக் கழகம் போலவே நடத்தி வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில்கூட அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட்டார்.

அந்த நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகுவதாகக் கூறி சில நாட்களிலேயே மீண்டும் இணைந்தார். ஆகவே சரத்குமாரே அதிமுகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த நிலையில் அவரது மகள் இணைந்தால் அது பெரிய விசயமே இல்லை” என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த நிலையில் வரலட்சுமியோ, “நான் துவக்கிய இந்த ‘சேவ் சக்தி’ என்ற இயக்கம்மூலம் அனைவரும் ஒன்றிணைந்து பெண்களின் உரிமைக்காக குரல்கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அனைவரும் பெண்களுக்கான உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டும். இதை வலியுறுத்தியே முதல்வரை சந்தித்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.