தனியார் விடுதியில் மீட்கப்பட்ட சுச்சி லீக்ஸ் புகழ் சுசித்ரா: மனநல மருத்துவமனையில் அனுமதி

காணாமல் போய்விட்டதாக கூறப்பட்ட பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து மீட்கப்பட்டு, மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிரபல பின்னணி பாடகியான சுச்சி லீக்ஸ் சுசித்ரா, பல்வேறு திரைப்படங்களில் பாடியிருக்கிறார். கடந்த ஆண்டு, பிரபல நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அதிரிச்சியை ஏற்படுத்திய அவர்,  இவ்விவகாரம் காரணமாகவே தனது கணவர் கார்த்திக்கிடமிருந்து விவாகரத்து பெற்றி பிரிந்து வாழ்ந்து வந்தார். 6 மாத காலத்திற்கு முன்பு அமெரிக்கா சென்ற சுசித்ரா, பின்னர் அடையாறில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பாடகி சுசித்ராவை காணவில்லை என அவரது சகோதரி சுஜிதா சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சென்னை தியாகராய நகரில் அமைந்திருக்கும் விடுதி ஒன்றில் அவர் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து காவலர்கள் சுசித்ரா தங்கியிருந்த விடுதியை சோதனையிட்டு, அங்கிருந்து அவரை மீட்டனர். தனது சகோதரி அளித்த புகார் தொடர்பாக சுசித்ராவிடம் காவலர்கள் விசாரித்தபோது, அங்கு வந்த தன் தங்கையை பார்த்து மிகவும் சத்தமாக கூச்சலிட்டுள்ள சுசித்ரா, தன்னுடைய குடும்பம் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சித்தரிப்பதாகவும், தன்னை ஏதாவது செய்து விடுவார்கள் என்று அச்சமாக இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து சுசித்ராவை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில், அவரது விருப்பப்படி காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.