ஆபாச படங்களை பீட்டா அமைப்பு தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக  அந்த அமைப்பு மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலரும் ஆய்வாளருமான எனோக் மோசஸ் என்பவர் , சென்னை, வேப்பேரியில் உள்ள போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் பீட்டா விலங்குகள் நல அமைப்பு மீது புகார் அளித்துள்ளார்.

அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது:

“பீட்டா அமைப்பு தொடர்பாக இணையதளத்தில் படங்களைத் தேடினால், மிகவும் புகழ்பெற்றவர்களின் ஆபாசமான படங்கள் வருகின்றன என்று ஒரு குழந்தை என்னிடம் தெரிவித்தது.

அதை நான் சோதனை செய்தபோது, விபச்சாரத்தை ஊக்கும் நபர்களின் புகைப்படங்கள் அதில் மிகவும் ஆபாசமாக பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதைப் பார்த்தேன். தன்னுடைய விளம்பரத்துக்காக பீட்டா இந்தியா நிறுவனம் பெண்களைப் பயன்படுத்தி ஆபாசமாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளது.

போஸ்கோ சட்டப்படி, குழந்தைகளிடம் பாலியல் தொடர்பான சமிக்கை செய்தல், படங்களை காட்டுதல், தொடுதல், சீன்டல்கள், தொந்தரவு செய்தல் போன்றவை  தண்டனைக்குரிய குற்றமாகும்.

கடந்த காலத்தில் பீட்டா இந்தியா அமைப்பு தனது அமைப்புக்கு விளம்பரம் தேடுவதற்காக இளைஞர்களையும்,  குழந்தைகளையும் பாலியல் ரீதியாக நிர்வான புகைப்படங்கள் எடுக்கப் பயன்படுத்தி இருக்கிறது தெரிய வருகிறது.

இந்த அமைப்பில் இருப்பவர்கள் இரட்டை நிலைப்பாடு உள்ளவர்கள்.  தோல் ஆடைகள் அணிபவர்களையுயும், இறைச்சி சாப்பிடுபவர்களையும் தங்களின் விளம்பரத்துக்காக பீட்டா அமைப்பு  பயன்படுத்துகிறது.

இந்த அமைப்பினர் விலங்கியல் குறித்தும் முழுமையாக அறியாதவர்கள், எந்த கல்லூரியிலும் சென்று முழுமையாக விலங்குகள் குறித்து படிக்காதவர்கள், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இருக்கும் உறவுகள் பற்றி  அறியாதவர்கள், கலாச்சார ரீதியாக மனிதரும் விலங்குகளும் பரஸ்பரம் எப்படி எப்படி உதவிக்கொள்கிறார்கள் என்பதை அறியாதவர்களை தங்கள் விளம்பரத்துக்கு பீட்டா அமைப்பு பயன்படுத்தி வருகிறது.

பீட்டா இந்தியா அமைப்பின் கடந்த கால செயல்பாடுகளைப் பார்த்தால் அது ‘ப்ளேபாய்’ போன்ற செயல்களையே கொண்டு செயல்படுவது தெரிகிறது. ஆகவே,  இந்தியாவில் பீட்டா அமைப்பு இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் பீட்டா இந்தியா அமைப்பு,  தவறான செயல்களை பரப்பி வருகிறது என்று நான் நம்புகிறேன்.

பீட்டா இந்தியா அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் பிரபலமானவர்கள் பெரும்பாலும் நிர்வான நிலையில் இருப்பதுபோலவும், பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் புகைப்படங்களில் இடம் பெற்று உள்ளனர்.

ஆதலால், போஸ்கோ சட்டம், ஐ.டி. சட்டம், பெண்களை தவறாக சித்தரித்தல் சட்டம், ஆகியவற்றின் கீழ் பீட்டா இந்தியா, அமைப்பின் முக்கியத் தலைவர்கள், தன்னார்வலர்கள், பணியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக இந்தியா, தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், குழந்தைகள் தவறான பாதைகளுக்கு இழுத்துச்செல்லப்படுவதை தடுக்க வேண்டும்”  இவ்வாறு அந்த மனுவில் எனோக் மோசஸ் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்தை, “ப்ரீ செக்ஸூக்கு கூட ஐம்பதாயிரம் பேர் கூடுவார்கள்” என்று கொச்சையாக விமர்சித்தார் பீட்டா ஆதரவாளர் ராதாராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பீட்டா மீது, சென்னை காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.