சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பாடதிட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்திலும் 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி டிவி வழியே பாடங்கள் நடத்தப்படுகின்றன.

பொதுமக்களின் கருத்துகளை தொடர்ந்து, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வரும் 19ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்குகின்றன. இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பாடதிட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 50 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம், குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பற்றிய முழு விவரங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

இந்த குறைக்கப்பட்ட பாடதிட்டம் குறித்த விவரங்கள், பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட உள்ளன. அதன் அடிப்படையில், இந்த கல்வி ஆண்டில், மீதம் உள்ள நாட்களில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.