லிஸ்பின்: போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்களப் பணியாளரான சுகாதாரத்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் அடுத்த  2 நாளில் திடீரென மரணத்தை தழுவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயாரித்துள்ளன.  இவைகளில் பல தடுப்பூசிகள், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. முதல்கட்டகமாக கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் வரும் 13ந்தேதி முதல், கோவாக்சின், கோவிஷீல்டு  தடுப்பூசி போடும்பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி அமெரிக்கா, போர்ச்சுக்கல் உள்பட  பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், அவை ஒவ்வாமை என்றும், அதற்கான சிகிச்சை அளித்தால் சரியாகி விடும் என்றும் விளக்கம் தரப்படுகிறது.

இந்த நிலையில்,  போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி கடந்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முதல்கட்டமாக அங்கு முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதனப்டி,  அந்நாட்டின் போர்ட்டோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், பணியாற்றி வந்த சோனியா அக்விடோ என்ற 41 வயது நிரம்பிய பெண்ணுக்கு கடந்த 30-ம் தேதி பைசர் நிறுவன தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் நலமாக இருந்த சோனியா, தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 நாட்கள் கழித்து (48 மணி நேரம்) திடீரென உயிரிழந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, உயிரிழந்த சோனியாவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், அவரது மறைவு குறித்து உடற்கூறாய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனது பெண் மரணத்துக்கு பதில் வேண்டும் என அவரது தந்தை போர்க்கொடி தூக்கி உள்ளார்.