நூல் விமர்சகர்: துரைநாகராஜன்

’யாரெல்லாம் பணத்தை கையால் தொட்டிருக்கிறீர்களோ அவர்கள் எல்லோருக்குமே பொருளாதாரத்தோடு தொடர்பு இருக்கிறது’ என்று தொடங்கி ’பொருளாதரம், இரண்டு பக்கமும் உண்மை இருக்கும் அதிசயம்’ என்று முடிக்கிறார் பொருள்தனைப் போற்று நூலின் ஆசிரியர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. முழுவதும் வாசித்தால் அவர் கூற்றின் உண்மை விளங்கும்.

ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகள் யாவும் நோயாளிக்கு மருத்துவர் விதிக்கும் உணவுக் கட்டுப்பாடு போலத்தான் என கசப்பு மருந்தை இனிப்பு தடவி ஊட்டுகிற லாவகமும், ’மிக அதிக அளவிலான பணம் மிகக் குறைந்த பொருட்களை விரட்டும் நிலமையே பணவீக்கம்’ என்று சொல்கிற எளிமையும் நூலின்பலம்.

ஒரு தொழிற்சலையில் ஸ்கூட்டர் தயாரிக்கிறார்கள் என்பதை வாசித்ததும் (பக்-35) இல்லையே ஸ்கூட்டர் உற்பத்தி பண்ணுவதாகத்தானே வரவேண்டும் என்கிற சிந்தனை வாசிப்பவருக்குத் தோன்றினால் அது இந்தப் புத்தகம் எழுதப்பட்ட நோக்கத்துக்கு கிடைத்த வெற்றி.

ஆயுத வர்த்தகத்தை கட்டுக்குள் கொண்டுவருவதன்மூலம் ஏழ்மையை ஒழிக்கமுடியும் என்கிற நூலாசிரியர் கருத்து ஐநா சபையில் ஒலிக்கவேண்டிய குரல். விவாதப் பொருளாகவேண்டிய உரத்த சிந்தனை.

’பிராந்திய நலனை பின்னுக்குத் தள்ளி பொருளாதாரம் ஓட்டுநர் இருக்கைக்கு வந்துவிட்டது. இந்த நூற்றாண்டில் சாமான்யர்களுக்கான மிகநல்ல செய்தி’ என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். ’பொருளாதாரத்துக்கு பணம் தவிர்த்து வேறு எதுவும் பொருட்டே இல்லை.’ (பக்-30) அப்படி இருக்க, மனிதாபிமானத்துக்கு இடமிருக்காத பொருளாதாரம் நாட்டை எப்படி சிறந்த முறையில் வழிநடத்த முடியும்? கேள்வி தவிர்க்க முடியவில்லை. அருளோடு பொருளீட்டுதலே சிறந்த பொருளாதார வளர்ச்சியாக இருக்க முடியும்.

ஒருவர் எது எதற்கு எவ்வளவு செலவு செய்கிறார் என்பதைப் பாருங்கள். அவர் எப்படிப் பட்டவர் என்பது தெரிந்துவிடும் – போன்ற புதிய தரிசனங்களும், உலக வங்கியிடம் நமக்கு கடனே இல்லை என்பது போன்ற உற்சாகத் தகவல்களும் புத்தகத்துக்கு கூடுதல் அழகு.

இளைஞர்கள் போட்டித் தேர்வில் வாகைசூட பொருளாதார அறிவு தடையாக இருந்துவிடக்கூடாது என்கிற அக்கறையை முன்வைத்து – அதேநேரத்தில் நகைச்சுவை உணர்வோடு எழுதப்பட்டிருக்கிறது. பொருளாத பாடத்தில் நகைச்சுவை கலப்பது தண்ணீரில் எண்ணெய் கலப்பதுபோன்ற கடினமான வித்தை. அது ஆசிரியருக்கு நன்றாகவே வசப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இந்தப் புத்தகம் பொருளாதாரத்தை எளிதாய் புரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்குமானது.

விலை: ரூ.200,  வெளியீடு: இந்து (தமிழ்), கஸ்தூரி மையம், 120, வாலாஜா சாலை, சென்னை – 600 002.   books@thehindutamil.co.in