ஒடிசாவில் இருந்து போஸ்கோ-இந்தியா நிறுவனம் வெளியேறுகிறது

புவனேஸ்வர்:

இரும்பு ஆலை அமைக்க ஒதுக்கப்பட்ட 2 ஆயிரத்து 700 ஏக்கர் நிலத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு ஒடிசா அரசுக்கு போஸ்கோ இந்தியா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. தென் கொரியாவை சேர்ந்த இந்த நிறுவனம் ரூ. 52 ஆயிரம் கோடி மதிப்பில் இரும்பு ஆலையை அமைக்க பாராதீப் அருகில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து மாநில தொழில் துறை அமைச்சர் தேபி பிரசாத் மிஸ்ரா கூறுகையில்,‘‘ இது தொடர்பான கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளது. தனது கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை ஒப்படைக்க அந்த இரும்பு ஆலை நிறுவனம் முன் வந்துள்ளது. வனத்துறை நிலம் மாற்றம், செஸ் உள்ளிட்ட இதர நிலுவை தொகையான ரூ. 82 கோடியை செலுத்துமாறு மாநில அரசு இந்த நிறுவனத்தை கேட்டுக் கொண்டதை தொடர்ந்து போஸ்கோ இந்தியா இந்த முடிவை தெரிவித்துள்ளது.

சம்மந்தப்பட்ட நிலத்தின் உரிமையை எடுத்துக் கொள்ளவும், நிலுவை தொகையை செலுத்தவும் விருப்பம் இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. போஸ்கோ இந்தியா நிறுவனத்துக்காக 2 ஆயிரத்து 700 ஏக்கர் நிலத்தை தொழில் துறை கையகப்படுத்தியது. இதில் ஆயிரத்து 700 ஏக்கர் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள நிலம் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது’’ என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் தற்போது முதல்வர் நவீன் பட் நாயக் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த நிலத்தை திரும்ப பெற முதல்வர் அனுமதி அளித்துள்ளார். போஸ்கோ இந்தியாவின் கடிதத்ததில்,‘‘திட்டமிட்டபடி இரும்பு ஆலையை தொடங்க முடியவில்லை. அதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று ஒடிசா அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னதாக கடந்த 2005ம் ஆண்டு 4 ஆயிரத்து 4 ஏக்கர் நிலம் வேண்டும் என்று கோரியிருந்தது. பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு முதல் கட்டமாக 2 ஆயிரத்து 700 ஏக்கர் நிலம் போதுமானது என்று தெரிவித்தது. ஆயிரத்து 700 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்த பிறகு போஸ்கோ இந்தியா நிறுவனம் அரசாங்கத்தோடு எவ்வித முறையான தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை.

அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2010ம் ஆண்டோடு முடிந்துவிட்டது. அதை புதுப்பிக்கவும் போஸ்கோ நிறுவனம் முயற்சிக்கவில்லை. இதேபோல் தொழிற்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அர்சலோமிட்டலின் 40 ஆயிரம் கோடி முதலீடு கடந்த 2013ம் ஆண்டு ஒடிசாவில் இருந்து திரும்ப பெறப்பட்டது.