கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர் அ. குமரேசன்

சாதனைப் பெண்களில் சிலரைத் தேர்ந்தெடுத்துப் பெருமைப்படுத்திப் பெருமை கொண்ட ‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி நிறுவனத்தின் ‘தங்கத் தாரகை’ விருது வழங்கல் நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களில் ஒருவனாகச் சென்றிருந்தேன். இலக்கியத் துறையில் சிவசங்கரி, சமூகத் தொண்டுக்காக சொர்ணலதா, அறிவியல் ஆய்வுப் பங்களிப்புக்காக வளர்மதி, திரை நடிப்புக்காக ராதிகா, விளையாட்டுக் களத்தில் கார்/பைக் வீராங்கனை அலிஷா அப்துல்லா, தொழில் முனைவுக்காக வீணா குமரவேல், கலை ஈடுபாட்டில் வாழ்நாள் சாதனைக்காக அனிதா ரத்தினம் ஆகியோருக்கு, நடுவர் குழு தேர்வு அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன. நடுச்சாலையில் கழுத்துச் சங்கிலியை அறுத்துச்சென்றவனோடு போராடி அடிபட்டு முக்கியச் செய்தியாக மாறிய துணிச்சல் பெண் லாவண்யா, தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் சிறப்புக்குரியவராக அறிவிக்கப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு விருது வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக மேடையேறி விருதுகளை வழங்கியவர்கள், விருதுகளைப் பெற்றவர்கள் இரு தரப்பிலுமாக அங்கு பேசியவர்களில் பலரும் குறிப்பிட்ட இரண்டு கருத்துகள் யோசிக்க வைக்கின்றன. முதல் கருத்து, பெண்களின் சுதந்திரம் எப்படி இருக்கிறது, பெண் சாதிப்பதற்கான வெளி எவ்வாறு அமைந்திருக்கிறது என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு வந்த பதில். பெண்களின் சுதந்திரமும் அதற்கான வெளியும் வெகு சிறப்பாக இருக்கின்றன என்றே அவர்கள் கூறினார்கள். அதற்கு, இந்தச் சாதனை விருதுகள் வழங்கப்படுவதே சான்று என்றும் கூறினார்கள். உண்மையிலேயே அவர்கள் அப்படி கருதக்கக்கூடும். அல்லது ஒரு இனிமையான நிகழ்ச்சியில் எதிர்மறையான கருத்துகளைச் சொல்ல வேண்டாம் என்றும் அவர்கள் நினைத்திருக்கக்கூடும்.

ஆனால், இப்படிச் சில பெண்களைத் தேர்வு செய்து சிறப்பு விருதுகள் வழங்கப்படும் சூழலே, இங்கே பெண்ணின் சுதந்திரம் முழுமையாக இல்லை என்பதற்குத்தான் சாட்சியமளிக்கிறது. பாலினப் பாகுபாடற்ற சுதந்திரமும் அதற்கான சமூக வெளியும் உண்மையிலேயே மிகப்பரந்ததாக இருக்கின்றன என்றால், பொது விருதுகள் பெறுவோரோடுதான் இத்தகைய சாதனைப் பெண்களும் போட்டிக்கு நிற்பார்கள். பெண்களுக்கு என்று தனிப்பட்ட விருது வழங்க வேண்டிய தேவை இருக்காது. அந்த விருதுகளின் நோக்கமே, எல்லாப் பெண்களுமே தங்களை இறுக்கமாகக் கவ்வியுள்ள கரங்களைப் பிரித்து விலக்கிவிட்டு முன்னேற்றப் படிகளில் கரங்களை உயர்த்தி நிற்க வேண்டும் என்பதுதான்.

பெண் எவ்வாறு இருக்க வேண்டும், அதுவும் இந்தியப் பெண் எப்படி இருக்க வேண்டும், அதிலும் தமிழ்ப்பெண் என்ன செய்ய வேண்டும் என்று இன்றும், இத்தனை சாதனை வெளிச்சங்களுக்குப் பிறகும், வலுவாகப் போதிக்கப்படுகிறது. “குடும்பப் பெண்ணாய் லட்சணமாய்” இருப்பதே இந்தியக் கலாச்சாரப் பெருமை என்ற சங்கிலி மாட்டப்படுகிறது. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு ஆகியவையே சிறந்த பெண்ணின் இலக்கணங்கள் என்று இன்னமும் பெருமையோடு வலியுறுத்தப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய செய்திகள் வருகிறபோதெல்லாம், பெண் எதற்காக வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், பெண் எதற்காகத் தன் ஆண் நண்பரோடு சுற்ற வேண்டும், பெண் எதற்காக நவீன ஆடைகள் அணிய வேண்டும் என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. ஆணாதிக்கத்தின் வெற்றி எதிலே இருக்கிறது என்றால், இப்படிப்பட்ட கேள்விகளைப் பெண்களைக் கொண்டே எழுப்ப வைத்ததில் இருக்கிறது. கருவிலேயே சிசுவின் பாலினம் கண்டுபிடித்துக் கருவைக் கலைக்கும் மருத்துவ மையங்கள் பற்றிய செய்திகள், கருவறையே கல்லறையாக மாறும் அபாயத்திலிருந்து தப்பித்துதான் பெண்கள் மண்ணுக்கு வர வேண்டியிருக்கிறது என்று காட்டுகின்றன. பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திக்கொள்ளும் பிள்ளைகளில் ஆகப் பெரும்பாலோர் பெண் குழந்தைகள்தான், உணவு வழங்குவதிலேயே உள்ள பாகுபாடு காரணமாக நாட்டின் 70 விழுக்காடு பெண்கள் ரத்தசோகையில் சிக்கியிருக்கிறார்கள்… இப்படியான செய்திகள் மண்ணுக்கு வந்த பிறகும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்த்துகின்றன.

சாதி ஆணவக் கொலைகளின் மையமான செய்தி பெண் தன் வாழ்க்கை இணையைத் தானே தேர்வு செய்யக்கூடாது என்பதுதானே? பெண்கள் வேலை செய்யும் அலுவலகங்கள் பலவற்றில் சட்டப்படி அமைக்க வேண்டிய பாலியல் அத்துமீறல் புகார் குழுக்கள் அமைக்கப்படவில்லை என்ற நிலவரம் எதைக் காட்டுகிறது? அப்படிப் புகார் செய்யும் பெண்ணைப் பற்றி, “அவ எப்படி நடந்துக்கிட்டாளோ” என்று சர்வசாதாரணமாக வீசப்படும் விமர்சனம் எதை வெளிப்படுத்துகிறது?

முஸ்லிம்களின் மக்கள்தொகை விஞ்சாமல் இருக்க வேண்டுமானால் ஒவ்வொரு இந்துப்பெண்ணும் பத்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறப்படுவதில், பெண் வேறு எந்த விதமான சாதனைகளுக்கும் முயலக்கூடாது, கட்டிலில் கிடப்பதும் தொட்டிலை ஆட்டுவதுமே முழுநேர வேலையாக இருக்க வேண்டும் என்ற வக்கிர விதி மறைந்திருக்கிறதே! பாலைவன நாடுகளில் பெண்ணும் ஆணும் உடலை முழுமையாக மறைத்தாக வேண்டிய நிலைமையிருந்தே முழு நீள அங்கிகள் அணியும் பழக்கம் வந்தது என்பதைப் புரிந்துகொள்ளாமல், அதையும் இஸ்லாமிய அடையாளமாக்கியதில் பெண்ணின் நடமாட்டச் சுதந்திரம் பர்காவுக்குள் அடைபட்டிருக்கிறதே! சமய வேறுபாடின்றி, சாதி வேறுபாடின்றி, இன வேறுபாடின்றி இப்படி பெண்ணுக்கான வெளியைச் சுருக்கி வைத்திருக்கிற ஏற்பாடுகள் மிக வலுவாகத் தொடர்கின்றன. நவீனத்தின் ஒரு அடையாளமான முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், பெண் தன் வாழ்க்கை இணையைத் தேர்வு செய்வதற்கு உள்ள உரிமைக்கு ஆதரவாகப் பதிவிட்டால், “உனக்கு ஒரு பெண் பிறந்திருந்தால் இப்படியெல்லாம் எழுத மாட்டாய்” என்றல்லவா பெரும்பாலான எதிர்வினைகள் வருகின்றன!

பெண் சாதனையாளர்கள் தாங்கள் பெண்ணாகப் பிறந்தும் இந்தச் சாதனைகளை நிகழ்த்துகிறார்கள் என்ற உண்மையை ஒப்புக்கொண்டாக வேண்டும். பெண்ணாகப் பிறந்தும் சாதனைப் பயணத்தைத் தொடங்க முடிந்தது என்பதை அங்கீகரிக்கத்தான் இத்தகைய ஊக்க விருதுகள் தேவைப்படுகின்றன. “பெண்ணாகப் பிறந்தும்” என்ற பதத்தைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் மறைந்தொழிய வேண்டும். அப்போது, பெண் சாதனையாளர்கள் என்று பாலின அடையாள அடிப்படையிலான அங்கீகாரங்களும் முடிந்துபோன கதையாகிவிடும். சாதனையாளர்கள் என்ற பொது அடையாளம் மட்டுமே நிலைபெறும். எழுத்தாளர்களாக, ஆய்வாளர்களாக, ஆசிரியர்களாக உள்ள சில பெண்கள் தங்களுக்கு இப்படிப்பட்ட விருதுகள் வழங்கப்படும்போது, “பெண் என்பதற்காக விருது வழங்காதீர்கள், சாதித்திருக்கிறோம் என்பதற்காக வழங்குங்கள்,” என்று கூறுவதுண்டு. அந்த சுயமரியாதைக் குரலை ஒட்டுமொத்த சமுதாயமும் மதித்தாக வேண்டும்.

விருது நிகழ்வில் என்னைச் சிந்தனையில் ஆழ்த்திய இரண்டாவது கருத்து, எதிர்மறைக் கூறுகள் பற்றி எண்ணிக்கொண்டிராமல் நேர்மறைக் கூறுகளை மட்டும் மனதில் கொள்ள வேண்டும் என்ற அறிவுரை. “நெகட்டிவ் விசயங்களை விட்டுவிட்டு, பாசிட்டிவ் விசயங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு முன்னேறுவோம்,” என்பதாக விருது பெற்றோர், விருது வழங்கியோர் இரு தரப்பிலிருந்துமே சொல்லப்பட்டது. அரங்கிலிருந்து அதற்குக் கைதட்டல்களும் எழுந்தன. ஆளுமை வளர்ச்சிப் பயிற்சி வகுப்புகளிலும், அதன் பெயரால் நிறைய விற்பனையாகிற புத்தகங்களிலும் இப்படித்தான் சொல்லப்படுகிறது.

ஆனால், பாசிட்டிவ் விசயங்களின் இன்னொரு பக்கம்தான் நெகட்டிவ் விசயங்கள்! நெகட்டிவ் விசயங்களைப் பற்றிப் பேசுவதே ஒரு பாசிட்டிவ் நடவடிக்கைதான். நெகட்டிவ் விசயங்களை விவாதிப்பது முடிவுக்குக் கொண்டுவருகிற பாசிட்டிவ் மாற்றங்களுக்காகத்தான்!

நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிந்தபோது பாடத்தில் படித்த ஒரு கதை மனதில் ஆழமாகப் பதிந்தது. பலருக்கும் அந்தக் கதை தெரிந்திருக்கக்கூடும்.

ஒரு அரசர், அவரது அமைச்சர் இருவரும் நெருங்கிய நண்பர்களுமாவர். அமைச்சரிடம் ஒரு பழக்கம், எது நடந்தாலும் “எல்லாம் நன்மைக்கே” என்று சொல்வார். ஒருநாள் அரசன் தனக்குப் பரிசாக வந்த வெளிநாட்டுப் பழம் ஒன்றைத் தானே கத்தியால் நறுக்கியபோது, கை கட்டைவிரலில் வெட்டிக் காயம் ஏற்பட்டுவிடுகிறது. எல்லோரும் அரசரைப் பார்த்து உடல் நலத்தை விசாரித்துக்கொண்டிருக்க, அமைச்சர் தன் வழக்கப்படி, “எல்லாம் நன்மைக்கே” என்கிறார். அரசர் ஆத்திரமடைந்து அமைச்சரைச் சிறையில் அடைக்கக் கட்டளையிடுகிறார். சிறைக்குக் கொண்டுபோகப்படுகிறபோதும் அமைச்சர், “எல்லாம் நன்மைக்கே” என்கிறார். சிலநாட்களில் காயம் ஆறுகிறது. அரசர் தன் வழக்கப்படி காட்டில் வேட்டையாடக் கிளம்புகிறார். அங்கே உடன் வந்த காவலர்களிடமிருந்து விலகி தனிமைப்படும் அவரைக் காட்டுவாசிகள் பிடித்துச் செல்கிறார்கள். காட்டுத் தெய்வத்திற்கு பலியிடும் நாள் அது. அரசரைப் பலி பீடத்திற்குக் கொண்டுசெல்கிறார்கள். வெட்டறிவாளை ஓங்கும்போது, பூசாரி அரசரின் கட்டைவிரல் காயத் தழும்பைக் காண்கிறார். உடனே, “ஊனமுள்ள உயிரைப் பலியிடக்கூடாது,” என்கிறார். அரசர் விடுதலை செய்யப்படுகிறார். அரண்மனைக்குத் திரும்பி வரும் அரசர், அமைச்சரை விடுதலை செய்ய ஆணையிடுகிறார். தன்னருகில் வரும் அமைச்சரிடம், “நீங்கள் சொன்னது போல் என் கையில் காயம் ஏற்பட்டது எனக்கு நன்மையாக முடிந்தது. ஆனால் உங்களைச் சிறையில் அடைத்தேன், அதுவும் நன்மைக்கே என்றீர்கள், அது எப்படி,” என்று கேட்கிறார். “என்ன மன்னா! இதற்கு முன் எப்போதாவது நீங்கள் என்னை விட்டுவிட்டு வேட்டைக்குப் போயிருக்கிறீர்களா? நானும் உங்களோடு வந்திருப்பேன், என்னையும் காட்டுவாசிகள் பிடித்துச் சென்றிருப்பார்கள். கையில் தழும்பு இருந்ததால் உங்களை விட்டுவிட்ட அவர்கள், எந்தத் தழும்பும் இல்லாத என்னைப் பலியிட்டிருப்பார்கள் அல்லவா,” என்று கூற, அரசர் தெளிவு பெற்று அமைச்சரை அணைத்துக்கொள்கிறார்.

பொதுவாக நல்ல அறிவுரைக் கதை என்று எடுத்துக்கொள்ளப்படுகிற இந்தக் கதை பல ஆண்டு காலம் என்னில் தாக்கம் செலுத்தியது. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் வலுப்பெற்று, எனது முயற்சிகள் முடங்கிப்போயின. வாழ்க்கை உண்மைகள் புரியப்புரிய இந்தக் கதையை மன பீடத்திலிருந்து கீழிறக்கினேன். அதன் பிறகுதான் வாசிப்பு, எழுத்து, பல்வேறு துறைகளில் வேலை, என் ஆழ்மனக் காதலான பத்திரிகையாளர் பணி என்று முயற்சிகளில் ஈடுபடலானேன். அந்தக் கதையை அப்புறப்படுத்தாமல் விட்டிருந்தால், தானாய் எதுவும் மாறும் என்ற பழைய பொய்யை நம்பி எந்த மாற்றமும் இல்லாமம் காணாமல் போயிருப்பேன்.

அரசியலில் எதிர்மறை நிலைமைகள் பற்றிய அறிவும், அதை வெளிப்படுத்தும் துணிவும் இருந்தாக வேண்டும். அப்போதுதான் நேர்மறை மாற்றங்களுக்கான அரசியல் முயற்சிகளில் பங்கேற்க முடியும். ஜனநாயகத்தின் பெயரால் செய்யப்படும் அக்கிரமங்கள் பற்றிய விழிப்பிருந்தால்தான் உண்மையான ஜனநாயகத்தை நிறுவ முடியும். உழைப்புச் சுரண்டல் பற்றிய கவனம் இருந்தால்தான் சமத்துவத்தை நோக்கி நகர முடியும். பொருளாதாரக் குற்றங்கள் பற்றிய புரிதல் இருந்தால்தான் எல்லோரும் பங்கேற்கிற பொருளாதாரமாக மேம்படுத்த முடியும். சமூக வெளியில் நிலவும் சாதிப் பெருமைகள், மதவாத மயக்கங்கள், சோதிடம் உள்ளிட்ட நம்பிக்கைகள், சகுனம் பற்றிய எச்சரிக்கைகள், பாலினப் பாகுபாடுகள்… இன்ன பிற எதிர்மறை நிகழ்வுப் போக்குகளை அறிந்துகொண்டால்தான், ஆக்கப்பூர்வமான மாற்றங்களை நிகழ்த்த முடியும். குடும்பக் கட்டமைப்பில் உள்ள அடக்குமுறை நோய்களைத் தெரிந்துகொண்டால்தான் ஆரோக்கியமான குடும்பமாய் வளர்க்க முடியும்…

அரசியல், சமூகம், குடும்பம் என்று எதிர்மறை நிலைமைகளின் சவால்கள் பற்றிய புரிதல் தனி மனிதர்களின் அணுகுமுறைகளுக்கும் பொருந்தும். அதே வேளையில், எதிர்மறை நிலைமைகளைப் பொருட்படுத்துவது என்பது, எதுவும் சரியில்லை என்று முடங்கிப்போவதற்காக அல்ல. எல்லாவற்றையும் சரிப்படுத்த வேண்டுமெனச் செயல்படுவதற்காகவே.

மேற்படி விருதுகள் பெற்ற சாதனைப் பெண்களுடைய சுயம் மேலோங்குவதற்குத் துணையாக அமைந்த பெற்றோர்களின் மனநிலை, குடும்பத்தினர் ஒத்துழைப்பு, பொருளாதார வசதி, ஊக்கமளித்த இதர பல புறச் சூழல்கள் ஆகியவை எல்லாப் பெண்களுக்கும் வாய்ப்பதில்லை. அப்படியும் அந்த சாதனைப் பெண்கள் தங்களுடைய வெற்றி எளிதாகக் கிடைத்துவிடவில்லை என்பதை மேடையில் பதிவு செய்தார்கள். எப்படிப்பட்ட சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது என்று அவர்கள் விளக்கமாகச் சொல்லவில்லைதான். பெண்ணாகப் பிறந்ததே ஒரு பெரிய சவாலாகத்தான் இருந்திருக்கும்.

“நிழலின் அருமை வெயிலில் தெரியும்,” என்ற பழமொழியின் நோக்கம் வெயிலிலே போய் வியர்த்து நிற்கச் சொல்வதல்ல. வெயிலின் கடுமையைப் புரிந்துகொண்டு நமக்கும் மற்றவர்களுக்குமான நிழல் மரங்களை வளர்க்க வழிகாட்டுவதுதான். வெயிலின் அருமை மழையில் தெரியும் என்பதையும் மனதில் கொள்ளலாம். ஆகவே, எதிர்மறைக் கூறுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என எதிர்மமைறையாகப் பேசிக்கொண்டிருக்காமல், அவற்றை எடுத்துக்கொள்வது பற்றிப் பேசுவோம், நேர்மறை வாழ்க்கையைச் சமைப்பதற்காக.