சண்டிகார்: இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசுகளை வைத்திருப்பதும் விற்பனை செய்வதும் தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்துள்ளது ஹரியானா மாநில அரசு.

இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட உதவி கமிஷனர்களும் மாநில அரசால் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசுகளை விநியோகம் செய்வது மற்றும் விற்பனை செய்வதை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தேவையான இடங்களில் சோதனைகள் மேற்கொண்டு, இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வணிகத்திற்கான பொது இயக்குநரகத்திடமிருந்து உரிமம் அல்லது அனுமதியின்றி பட்டாசுகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியாது. சமீபத்திய ஆண்டுகளில் அந்த இயக்குநரகத்தால், பட்டாசுகளை இறக்குமதி செய்வது தொடர்பாக எந்த உரிமமோ அல்லது அனுமதியோ வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்தாண்டு யாரும் பட்டாசுகளை இறக்குமதி செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பட்டாசு விற்பனை செய்ய வேண்டுமெனில், பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பிடமிருந்து உரிமம் பெற வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.