‘போஸ்ட் பேமென்ட் வங்கி”: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

டில்லி:

நாடு முழுவதும் போஸ்ட் பேமென்ட் வங்கி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

கிராமப்புற மக்களும் பயன்படும் வகையில் இந்திய அஞ்சல் துறையின் சார்பில்  போஸ்ட் பேமென்ட் வங்கி சேவை தொடங்கப்படுகிறது. இந்த சேவையை இன்று  நாடு முழுவதும் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறாா்.

தற்போது நாட்டின் மிகப்பெரிய வங்கியாக எஸ்பிஐ திகழ்கிறது. அதற்கு அடுத்தபடியாக நாட்டின் பெரிய வங்கியாக போஸ்ட் பேமென்ட் வங்கியை உருவாக்க மத்திய அரசு  திட்டமிட்டு உள்ளது.

ஏற்கனவே சுதந்திர தின உரையின்போது பேசிய பிரதமர் மோடி, இந்த ஆண்டு இறுதிக்குள்  1.55 லட்ச தபால் நிலையங்கள் மற்றும் தற்போது இருக்கும் 3 லட்ச ஊழியர்களுடன் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி தொடங்கப்படும் என கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று  இந்திய தபால் துறை சார்பில், பேமெண்ட் வங்கிகள் சேவை இன்று தொடங்கப்படுகிறது.

இந்திய கிராமப்புறங்களில் தற்போது 50 ஆயிரம் வங்கி கிளைகள் தங்கள் சேவையை வழங்கி வருகின்றன. அதே சமயத்தில் அஞ்சல் துறைக்கு நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் 1 லட்சத்து 30 ஆயிரம் சேவை மையங்களை அமைத்துள்ளன.

அஞ்சல்துறை சேவை மையங்கள் வங்கி சேவைகளை வழங்கும் மையமாக மாற்றப்படுவதால் இந்திய கிராம மக்களுக்கு வங்கி சேவை எளிதாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான தபால் அலுவலகங்கள் இணையதளம் மூலம் இணைக்கப்பட்டு உள்ளது.

நகரங்கள் முதல்  குக்கிராமங்கள் உட்பட, இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே வந்து, வங்கிச்சேவை அளிக்க, தபால் துறைதிட்டமிட்டு உள்ளது.

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் மூன்று வகையான சேமிப்பு கணக்குகளை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.. வழக்கமான சேமிப்பு கணக்கு, மின்னணு சேமிப்பு கணக்கு, அடிப்படையான சேமிப்பு கணக்கு என்று மூன்று விதமான வசதிகள் கிடைக்கும். இந்த சேமிப்பு கணக்குக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

தபால் துறை சார்பில் இன்று தொடங்கப்படும்  ‘இந்தியன் போஸ்டல் பேமென்ட் வங்கியில் வங்கிகளைப் போலவே, ஏ.டி.எம்., கார்டு, காசோலை வசதிகளும் செய்யப்படுகிறது.

இந்த சேவையில், தபால்காரரிடம், இணையதள வசதி உள்ள மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டு, ஸ்வைப்பிங் கருவி வழங்கப்படும் என்றும், அவரிடம்  பணம், ‘டிபாசிட்’ செய்து, உடனுக்குடன் ரசீது பெற்றுக் கொள்ளலாம். பணம் தேவையென்றாலும், அவரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

முதற்கட்டமாக  நாடு முழுவதும், 650 மாவட்ட தலைநகரங்களில், இந்த திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம், 3,000 பகுதிகளில் வீட்டுக்கே சென்று, வங்கிச் சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை கணக்கில் கொண்டு, இந்த வங்கி சேவைக் கான  பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.கிராம மக்கள் மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர் களுக்கு, தபால் வங்கிச் சேவை, மிக உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.