புதுடெல்லி: குறிப்பிட்ட 10 நாடுகளுக்கு மட்டும் அவசரத் தேவைக்காக பார்சல்களை அனுப்புவதற்கு அனுமதியளித்துள்ளது இந்திய அஞ்சல் துறை.
ஊரடங்கால், மார்ச் 23 முதல் அனைத்து நாடுகளுக்கும் சர்வதேச பார்சல் சேவைக்கு அஞ்சல் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து, பார்சல்கள் இந்தியாவுக்குள் நுழையவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
நோய் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், கருவிகள், மருந்துகள், முகக் கவசங்கள் அனுப்பும் சேவை மட்டும் இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், வெளிநாடுகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கான சேவையை அஞ்சல்துறை துவக்கி உள்ளது.
முதற்கட்டமாக, ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேஷியா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து ஆகிய மொத்தம் 10 நாடுகளுக்கு மட்டும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்பதிவை அஞ்சல் நிலையங்களில் மேற்கொள்ளலாம் என்றும் அஞ்சல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.