சென்னை:

சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதி உள்பட தமிழகத்தில்  பல தொகுதிகளில் இன்று காவல் துறையினருக்கு தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதுபோல தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் இன்று தபால் வாக்குப்பதிவு நடை பெறுகிறது.

தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் பணிகளுக்கு செல்லும் காவல் துறையினர், தங்களது வாக்குகளை செலுத்தும் வகையில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் தபால் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.

சென்னையில், தென்சென்னை, மத்திய சென்னை, வடசெனை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு மக்களவை தொகுதிகளுக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அதுபோல இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி குறித்து  சிறப்பு வகுப்பு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அவர்களும் தபால் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர்.

இதற்கிடையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கண்டிப்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளருக்குதான் ஓட்டு போட வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.