மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனை கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், இரு கட்சிகள் இடையே அதிகாரப்பகிர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில், மாநிலத்தின் அடுத்த முதல்வர் பால்தாக்கரேயின் பேரனும், உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரே என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எந்தவித அரசியல் அனுபவம் இல்லாமல், கட்சியின் இளைஞர் அணி தலைவராக உள்ள ஆதித்ய தாக்கரே முதன் முதலாக இந்த தேர்தலில் வொர்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவரை மாநில முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்று சிவசேனை கட்சித் தொண்டர்கள் பல பகுதிகளில் போஸ்டர் ஒட்டி தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த தேர்தலில் தனி தனியே போட்டியிட்ட இவ்விரு கட்சிகளும், இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சி அதிகாரம் தொடர்பாக  இவ்விரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே, ஆட்சி அதிகாரத்தில் 50 சதவிகிதம் தங்களுக்கு வேண்டும் என்றும், ஆட்சியில் இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தங்களுக்கு வேண்டும் என்றும் வலியுறுத்தி வருவதால், இரு கட்சிகள் இடையே  வேறுபாடுகள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், ஆதித்ய தாக்கரேவை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. ஏற்கனவே தேர்தலுக்கு முன்பே இதுபோன்ற கோரிக்கை எழுந்த நிலையில், அதை பாஜக ஏற்க மறுத்த நிலையில், தற்போது மீண்டும் ஆதித்ய தாக்கரே குறித்த கோரிக்கை எழுந்த நிலையில், இரு கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ்தாக்கரே,  பாஜக கருத்துக்களுக்கு நாங்கள் சம்மதம் தெரிவிக்கும் நிலையில், எங்கள் தரப்பு கருத்துக்களையும் அவர்கள் கேட்க வேண்டும்” என்று கூறினார்.

இதன் காரணமாக இரு கட்சிகள் இடையே இழுபறி நீடித்து வருகிறது.