முசாபர்பூர்

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் காணாமல் போய் விட்டதால் கண்டுபிடிப்போருக்கு ரூ. 5100 பரிசு என முசாபர்பூரில் கிண்டலாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் சுமார் 200 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். மரணமடைந்த குழந்தைகளுக்கு அக்யூட் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் தாக்கி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இதே தாக்கம் காரணமாக மேலும் சுமார் 150 குழந்தைகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது சமூக ஆர்வலர்களிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த திங்கள் கிழமை அன்று சமூக ஆர்வலர் தமன்னா ஹஷ்மி மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் மாநில சுகாதார அமைச்சர் மங்கள் பாண்டே ஆகியோர் மீது ஒரு வழக்கு பதிந்துள்ளார். இந்த குழந்தைகள் மரணத்துக்கு இவர்கள் இருவருடைய கவனமின்மையே பொறுப்பு என வழக்கு மனுவில் தமன்னா தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்து எதிர்க்கட்சி தலைவரன தேஜஸ்வி யாதவ் மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளர்.

தமன்னா நேற்று நகரெங்கும் தேஜஸ்வி யாதவை தேர்தல் முடிவுக்கு பின் காணவில்லை எனவும் கண்டுபிடிப்போர் மற்றும் தகவல் தெரிவிப்போருக்கு ரூ.5100 பரிசு வழங்கப்படும் எனவும் ஒரு சுவரொட்டியை தமன்னா ஒட்டி உள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் தமன்னா, “மாநிலத்தில் ஏற்கனவே, பலாத்காரம், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது ஏராளமான குழந்தைகள் மரணம் அடைந்துள்ளன. ஆனால் அரசு அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு கடமை தவறினால் எதிர்க்கட்சி களத்தில் இறங்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை. தன்னை எழைகள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் தலைவர் என தேஜஸ்வி கூறிக் கொள்கிறார்.

ஆனால் தற்போது ஏழைக் குழந்தைகள் மரணம் அடைந்த போது அவர் மாநிலத்தை விட்டு எங்கு சென்றுள்ளார்? ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே அவர் செயல்படுவாரா? தலைவர்கள் தலித், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் போன்றோரை தங்களது அரசியல் விளையாட்டில் துருப்புச் சீட்டுகளாக பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்களுக்கு நன்மை எதுவும் செய்வதில்லை.” என தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 28 மற்றும் 29 தேதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேர்தல் முடிவு ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்துக் கொண்ட தேஜஸ்வி யாதவ் அதன் பிறகு எங்கு சென்றார் என்பது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. அவர் உலகக் கோப்பை கிரிக்கெட் பந்தயத்தை காண லண்டன் சென்றுள்ளதாக அக்கட்சி துணைத் தலைவர் ரகுவந்த் பிரசாத் சிங் தெரிவித்தார். ஆனால் அதை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மனோஜ் ஜா மறுத்துள்ளார். தேஜஸ்வி டில்லியில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.