முஸ்லிம்கள் உடனே வெளியேறவேண்டும்: உ.பியில் சுவரொட்டிகளால் பதற்றம்

லக்னோ: 

ஊரை விட்டு முஸ்லிம்கள் உடனே வெளியேறவேண்டும் என உத்தரபிரதேசத்தில் சுவரொட்டிகள் காணப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.

பேர்லி என்ற மாவட்டத்தில் உள்ள ஜியானக்லா என்ற ஊரில், முஸ்லிம்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டும், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கும் சுவரொட்டிகள் காணப்பட்டதால் இஸ்லாமியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் அந்த சுவரொட்டிகளில், அமெரிக்காவில் ட்ரம்ப் என்ன செய்ய விரும்புகிறாரோ அதையே நாங்கள் செய்ய விரும்புகிறோம் என்றும் முஸ்லிம்கள் இந்தாண்டு இறுதிக்குள் ஊரை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பயமுறுத்தும் விதமாக எழுதப்பட்டிருந்தது.  இதுவரை இந்தக்கிராமத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது இல்லை என்றும், ஹோலிப்பண்டிகையை கூட அனைவரும் சேர்ந்துதான் கொண்டாடினோம் என்றும் கிராம மக்கள் கூறினர்.

தகவலறிந்து போலீசார் அங்குவந்து சுவரொட்டிகளை அகற்றினர். இந்துத்துவ அமைப்புகளில் தீவிரமாக செயலாற்றி வரும் 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் பலர் போலீசாரின் சந்தேக வளையத்துக்குள் வந்துள்ளனர். மதக்கலவரம் நிகழ்ந்துவிடாதபடி அந்தகிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அறுதி பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றது. முஸ்லிம் எம் எல் ஏக்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.

 

 

English Summary
Posters in Bareilly village ask Muslims to leave