பாஜக என்றால் வரவேண்டாம்: கேரளாவில் வீடுகளில் போஸ்டர் ஒட்டும் குடியிருப்புவாசிகள்…!

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக பாஜகவினர் யாரும் எங்களின் வீடுகளுக்கு வர வேண்டாம் என்று கேரளாவில் குடியிருப்புவாசிகள் வாசல்களில் எதிர்ப்பு அட்டைகளை தொங்க விட்டுள்ளனர்.

நீண்ட சர்ச்சை, ஆவேசம், எதிர்ப்புகளுக்கு இடையே, நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டமானது நிறைவேறியது. ஆனால் அந்த சட்டத்தை எதிர்த்து நாடு எங்கிலும் நடைபெறும் போராட்டங்கள் இன்னமும ஓயவில்லை.

தொடர் போராட்டங்களை கண்டு மத்திய அரசு, அந்த சட்டத்தை கைவிட போவதில்லை என்று அறிவித்து இருக்கிறது. மேலும், மக்களிடையே இந்த சட்டம் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள தொண்டர்களுக்கு பாஜக அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி, பாஜகவினரும் களத்தில் இறங்க ஆரம்பித்து விட்டனர். பல மாநிலங்களில் இந்த சட்டம் குறித்தும், அதனால் நாட்டுக்கு என்ன பலன் என்பது பற்றியும் விளக்கவுரை ஆற்ற ஆரம்பித்துவிட்டனர்.

அதேபோல கேரளாவிலும் பாஜக பிரச்சாரத்தை கையில் எடுக்க ஆரம்பித்து இருக்கிறது. ஆனால், அதை அம்மாநில மக்கள் வரவேற்கவில்லை. மாறாக, அதை எதிர்க்கும் விதமாக வீடுகளின் வெளியே போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர்.

கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கரடி என்ற கிராமத்தில் உள்ள 350 வீடுகளில் இதுபோன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை எதிர்ப்பதாக மலையாளத்தில் அந்த போஸ்டர்கள் அடிக்கப்பட்டு உள்ளன.

இந்த சட்டத்தால் முஸ்லிம் மக்களுக்கு பலன்கள் கிடைக்கிறது என்பது போல படங்களை பாஜகவினர் பரப்ப ஆரம்பித்தனர். அதன்பிறகு தான் நாங்களும் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளோம் என்று அப்பகுதி குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரச்சாரத்துக்கு வரும் பாஜகவினரிடம், இங்குள்ள மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கின்றனர். ஆனால் அதை போட்டோ எடுக்கும் பாஜகவினர் முஸ்லிம்கள் ஆதரிக்கின்றனர் என்று மாற்றி சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அதை முறியடிக்கவே, இப்போது போஸ்டர்களை ஒட்டி, பாஜகவினரை உள்ளே வரவேண்டாம் என்று அறிவிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.