ரஃபேல் விமான விலையை கூறுபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு: காங்கிரஸ் பரபரப்பு போஸ்டர்

பாட்னா :

பேல் விமானம் ஒன்றின்  விலையை கூறுபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என  பீகாரில் பரபரப்பு போஸ்டர்  ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களை மாநில காங்கிரசார் ஒட்டி உள்ளனர்.

மாநில காங்கிரஸ் தலைவர்கள் சித்தார்த் க்ஷத்ரியா மற்றும்  ராமன் ஆகியோர் சார்பாக ‘பூஜா தமாக்கா’ (பூஜை பரிசு) என  ஒட்டப் பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில், கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மோடியின் ஓவியங்களை இடம் பெற்றுள்ளன. அத்துடன்  ஒரு ரபேல் விமானத்தின் விலை எவ்வளவு என, யாராவது சொல்ல முடியுமா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

ரபேல் ரக விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், ஒரு ரபேல் விமானத்தின் விலை எவ்வளவு என, யாராவது சொல்ல முடியுமா?

நாடு முழுவதும் உள்ள  67 விமான நிலையங்களில்  65 விமான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுவிட்டன என்று மோடி கூறியுள்ளார். 2014 ஆம் ஆண்டில் அவர் பொறுப்பேற்றதில் இருந்து 35 விமான நிலையங்களை திறந்து வைத்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். அவை, எங்கெங்கு அமைக்கப்பட்டுள்ளன; அவற்றின் பெயர் என்ன என்பதை யாரேனும் கூற முடியுமா?

இந்த கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பவர்களுக்கு , துர்கா பூஜையை முன்னிட்டு, பண்டிகை கால பரிசு தொகையாக 5 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த போஸ்டர் மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.