எல் டி டி இ தலைவர் பிரபாகரன் குறித்த பதிவுகள் முகநூலில் நீக்கம்

டில்லி

முகநூலில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் குறித்த பதிவுகள் நீக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் தமிழர்கள் உரிமைக்காகத் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் (எல் டி டி இ) போராடி வந்தது.   முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தற்கொலைப்படை தாக்குதலில் கொலை செய்யப்பட்டதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. அதையொட்டி அந்த இயக்கம் இந்தியாவில் இன்று வரை தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி அன்று நடந்த பிரபாகரன் கொல்லப்பட்டார், ஆயினும் அவருடைய ஆதரவாளர்கள் அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகச் சொல்லி வருகின்றனர். இந்நிலையில் தற்போது முகநூலில் எல் டி டி இ தலைவர் பிரபாகரன் தொடர்பான அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகிய இரு தலங்களிலும் தமிழ் ஈழம், பிரபாகரன், ஈழம், தமிழ் இன அழிப்பு போன்ற பதிவுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இது குறித்து தமிழ் ஈழத்தைச் சேர்ந்த ஆர்வலர் சிலர் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.  மேலும் சமூக வலைத் தளங்களில் தமிழர்கள் துயர் குறித்துப் பதிவிடக் கட்டுப்பாடுகள் நிலவுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.