டில்லி

கொரோனாவால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வேலை இழப்பு 40 கோடி அதிகரித்துள்ளதால் அரசின் வறுமை ஒழிப்பு திட்டங்களும் பாதிப்பு அடையலாம் என கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்து வருகிறது.  இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மாதம் 24 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது.  இதனால் அனைத்து தொழிலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பல மூடப்பட்டுள்ளன.   இதனால் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாததால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

சர்வ தேச தொழிலாளர் அமைப்பு கொரோனா பாதிப்பால் சுமார் 40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் வருமைப்பிடிக்குள் தள்ளப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.   இந்தியாவில் கடந்த மார்ச் 22 மற்றும் ஏப்ரல் 5ஆம் தேதிக்கு இடையே சுமார் 22% மக்கள் பணியை இழந்துள்ளனர்.  இந்திய அரசு மக்களை வறுமையில் இருந்து மீட்கப் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

ஆனால் தற்போதைய பொருளாதார சரிவு கொரோனா பாதிப்பால் மேலும் சரியக் கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.  தற்போது மேலும் 40 கோடி தொழிலாளர்கள் வறுமை பிடியில் சிக்குவார்கள் என்பதால் அரசின் வறுமை ஒழிப்பு திட்டங்கள் கடுமையாகப் பாதிப்பு அடையும் என திட்டக் கமிஷன் ஆணையர் அபிஜித் சென் தெரிவித்துள்ளார்.