தேர்தல் முடிந்த அடுத்த நாளே 24 மணி நேரம் மின் தடை : விவசாயிகள் புகார்

திருச்சி

தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் ஒரு நாள் முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் வெகு நாட்களாக விவசாயிகளுக்கு இலவச மின்சார சேவை வழங்கப்பட்டு வந்தது.  இந்த சேவை ஒரு முனையாகவும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.    அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் மின்சாரத்தை பயன்படுத்துவதால் வோல்டேஜ் குறைவு ஏற்பட்டு மோட்டார்கள் இயங்க முடியாமல் போனது.

இதையொட்டி விவசாயிகள் தங்களுக்கு மும்முனை மின்சாரம் அனைத்து நேரமும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.  இதையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

இந்த மாதம் 1 ஆம் தேதியில் இருந்து 6 ஆம் தேதி அதாவது தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாள்  வரை 24 மணி நேர மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.  அதற்கு அடுத்த நாள் ஒரு நாள் முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது.  தற்போது தினசரி 12 மணி நேர மின் விநியோகம் மட்டுமே வழங்கப்படுவதாக விவசாயிகள் புகார் கூறி உள்ளனர்.

அதைத் தவிர மீண்டும் குறைந்த வோல்டேஜ், அடிக்கடி மின் தடை, ஆகியவை மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.   இதையொட்டி திருச்சி மற்றும் தஞ்சை மாவட்ட விவசாயிகள் இந்த திடீர் மின் தடை மற்றும் வோல்டேஜ் குறைபாடு காரணமாக தங்கள் மோட்டார்கள் பழுதடைந்துள்ளதாக கூறி உள்ளனர்.

ஆனால் தமிழக மின்வாரியம் இதை மறுத்துள்ளது.  எந்த பகுதியிலும் மின் தடை இல்லை என்றும் அது குறித்து எவ்வித புகார்களும் வரவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மேலும் கோடைக்காலம் காரணமாக மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதால் ஒரு சில நிமிடங்கள் மின் தடை ஏற்பட்டிருக்கலாம்.  அவை உடனுக்குடன் சரி செய்யப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.