நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மனைவியுடன் கடத்தல்! ஏழு பேர் கைது!

பிரபல நடிகர் “பவர் ஸ்டார்” சீனிவாசனையும் அவரது மனைவியையும் கடத்திய ஏழு பேர் கும்பல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது.

கடந்த வாரம் நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் கடத்தப்பட்டதாக அவரது மனைவி ஜூலி சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இது குறித்து காவல்துறையினர் விசாரித்தபோது, அலைபேசியில்  பேசிய பவர் ஸ்டார் சீனிவாசனே, தான்  ஊட்டிக்கு இடம் வாங்க வந்துள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் நிஜமாகவே அவர் கடத்தப்பட்ட விவகாரம் தற்போது வெளியாகி உள்ளது.

நேற்று மதியம் கோயம்பேடு காவல் நிலையத்துக்கு வந்த பவர் ஸ்டார் சீனிவாசன் காவல் துறையினரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது:

““கடந்த 3ம் தேதி நான் கோவையில் இருந்தேன். அப்போது சென்னையில் இருந்து பிஆர்ஓ ப்ரீத்தி என்பவர் எனக்கு அலைபேசினார். ஒரு படத்தில் நடிக்க தயாரிப்பாளர் என்னை சந்திக்க விரும்புவதாக கூறினார்.

ஆகவே உடனே கோவையில் இருந்து காரில் சென்னை வந்தேன். பி.ஆர்.ஓ. ப்ரீத்தி குறிப்பிட்ட கோயம்பேட்டில் உள்ள ஓட்டலுக்கு சென்றேன். .

ஓட்டல் அறையில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, தயாரிப்பாளர் செல்வின் என கூறிக்கொண்டு ஒருவர் வந்தார், அவருடன் ஸ்டண்ட் யூனியனை சேர்ந்த ஒருவரும் வந்தார். சற்று நேரத்தில் ஏழு பேர் கொண்ட ஒரு கும்பலும் அறைக்குள் புகுந்தது. அவர்களில் மூன்று பேர் தங்களை  வழக்கறிஞர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.

அவர்கள் வந்தவுடன் என்னிடமிருந்த இரண்டு செல்போன்களையும் பிடுங்கிக்கொண்டார்கள்.

பிறகு வலுக்கட்டாயமாக எனது  உடைகளை களைந்து என் தொப்பியையும் பறித்துக்கொண்டு என்னை தரையில் அமரவைத்தார்கள். நான், “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்” என்று கேட்டதற்கு, அவர்கள், “பெங்களூருவில் உள்ள ஆலம் என்பவருக்கு நீ 90 லட்சம் தர வேண்டுமே. அதை உடனே கொடு” என்றனர்.

“அது குறித்த வழக்கு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது” என்றேன்.

“அந்தப்பணத்தை உடனே தரவேண்டும்” என்று மிரட்டினார்கள்.

நான், “என்னிடம் பணம் இல்லை, ஊட்டியில் உள்ள வீட்டை எழுதித்தருகிறேன்” என்றேன்.

பிறகு என்னை வலுக்கட்டாயமாக ஊட்டி அழைத்துச் சென்றனர். அங்கு ஆலம் வந்து வீட்டை எழுதித்தரும்படி மிரட்டினார். “அது என் மனைவி பெயரில் உள்ளது” என்றேன்.

“உன் மனைவியை உடனடியாக ஊட்டிக்கு வரச்சொல்லி வீட்டை பதிவு செய்து கொடு” என்றார்.

என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாததால் 6-ம் தேதி விமானம் மூலம் கோவை வரவழைத்து அங்கிருந்து ஊட்டிக்கு வரவழைத்தனர்.

இடையில் நான் என் குழந்தைகளை பார்க்கவேண்டும் என்று சொன்னேன். என்னிடம் சில தாள்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு என் மனைவியை பணையமாக வைத்துக்கொண்டு என்னை சென்னை செல்ல அனுமதி அளித்தனர். சென்னை வந்த நான் நேராக இங்கு வந்து புகார் அளிக்கிறேன்.

என்னை கடத்தி பணம் கேட்டு மிரட்டி என் மனைவியை அடைத்து வைத்துள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என் மனைவியை மீட்டுத்தர வேண்டும்” என்று பவர்ஸ்டார் சீனிவாசன் புகாரில் தெரிவித்துள்ளார்

 

.இதையடுத்து கோயம்பேடு காவல் நிலையத்தில் 147 (கலவரம் ஏற்படுத்தும் எண்ணத்துடன் செயல்படுதல்) 364 (எ) (பணையத்தொகைக்காக கடத்தி அடைத்து வைத்தல், மிரட்டுதல்), 365 (ரகசியமாகவும் தவறான உள்நோக்கத்துடனும் கடத்துவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பவர் ஸ்டார் சீனிவாசனுடன் ஊட்டிக்குச் சென்றனர்.

அங்கு தங்கியிருந்த ஆலம், செல்வின், ப்ரீத்தி உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். ‘பவர் ஸ்டாரின்’ மனைவியையும் மீட்டனர். தற்போது அவர்களை சென்னைக்கு அழைத்து வந்துகொண்டிருக்கிறார்கள்.