கொரோனா தடுப்புப் பணியில் பிபிஇ உபகரணங்கள்தான் பெஸ்ட் – ஆய்வில் தகவல்

சென்ன‍ை: கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுவோர் பிபிஇ உபகரணகளைப் பயன்படுத்துவதன் மூலமே அதிக பாதுகாப்பு பெறுகிறார்கள் என்றும், மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரின்(HCQ) மூலம் பெரிய பயன் விளைவுகள் எதுவும் கிடையாது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதல் முதல் மே மாதம் வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான ஆபத்துகள் குறித்து தெளிவாக அறிந்துகொள்வதற்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் விபரங்கள், ஜேஏபிஐ(இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு) என்ற அமைப்பின் ஜர்னலில் வெளியிடப்பட்டது.

இந்திய சுகாதார பணியாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வு இது என்று கூறப்படுகிறது. ஆய்வில் பங்கேற்ற 3667 சுகாதாரப் பணியாளர்களில், 539 பேருக்கு மட்டுமே ஃப்ளூ தொடர்பான அறிகுறிகள் இருந்தன.

இந்த 3667 நபர்களில் 1353 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இறுதிப் பகுப்பாய்வில் 1113 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டனர். ஏனெனில், மீதியுள்ளோரின் பரிசோதனை முடிவுகள் கிடைக்கவில்லை.

பயணம் செய்த நபர்கள் (கடந்த 30 நாட்களில்) அதிகம்பேர், ஃப்ளூ தொடர்பான அறிகுறிகளைப் பெற்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் 1113 பேரில், 755 பேர் HCQ மருந்தை எடுத்துக்கொண்டவர்கள். அவர்களில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதேசமயம், தொற்று உறுதிசெய்யப்பட்ட வேறு 6 நபர்கள் HCQ எடுத்துக்கொள்ளாதவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.