தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரன கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS ) அவர்களின்  முகநூல் பதிவு:

பிரபாகரன்
பிரபாகரன்
“அன்புக்குரிய பத்திரிகையாளர்  அனிதா பிரதாப் அவர்கள் எனக்கு நட்பு ரீதியான நண்பர். அவருடன் தோழமையோடு பழகியுள்ளேன். இலங்கைக்கும் 1983 கலவர காலக்கட்டங்களில் தனி மனுஷியாக சென்று வந்தவர். ஈழத்தின் மீதும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதும் நேசம் கொண்டவர்.  தான் சிறப்பு செய்தியாளராக பணியாற்றிய  Sunday ஆங்கில வார இதழுக்கு தம்பி பிரபாகரன் அவர்களின் பேட்டி வேண்டும் என்று 1984ல் ஜனவரி 20ம் தேதி என்னிடம் கேட்டார்.
இதை தம்பி அவர்களிடம் தெரிவித்தபோது அவர் இப்போது பேட்டி வேண்டாம் என்று கூறினார். பேபி சுப்ரமணியமும், நானும் தொடர்ந்து வலியுறுத்தியதால் அனிதா பிரதாப்புக்கு பேட்டி கொடுக்க சம்மதித்தார்.
ஆனால் கேள்விகள் எழுதி கொடுத்தால், பேட்டியும் நான் எழுதி வழங்கிவிடுகிறேன். முதலில் பேட்டிக்கான கேள்விகளை எழுதித் தாருங்கள் என்று தம்பி கூறினார். அதுவரை பத்திரிகைகளுக்கு தம்பி பிரபாகரன் எந்தவித பேட்டியும் தந்ததில்லை. இந்தப் பேட்டிதான் அவருடைய முதல் பேட்டி. பல செய்திகளுக்கும் விடையளித்தது மக்களுக்கு தெளிவான விளக்கங்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றி பெற முடிந்தது.
கே.எஸ். ராதாகிருஷ்ணன்
கே.எஸ். ராதாகிருஷ்ணன்
கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆனந்த பஜார் பத்திரிகை நிறுவனத்தின் வெளிவந்த Sunday ஆங்கில இதழில் தம்பி பிரபாகரனுடைய பேட்டி முதன்முதலாக வந்தது.  உலகத்தை ஈர்த்தது. அவரைப் பற்றி புரிந்துகொள்ளாத உலகம் புரிந்துகொள்ள முடிந்தது.
தலைமறைவு வாழ்க்கை, கொரில்லாப் போர், ஆயுதப் போராட்டம் என்ற பல சூழல்களில் முதன்முதலாக தன் பேட்டியின் மூலம் தன்னுடைய முகத்தையும், முகவரியையும் தெளிவாக காட்டியது Sunday பத்திரிகையில்தான். அந்தப் பேட்டி நல்ல முறையில் வெளிவர அனைத்து வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டது அன்புக்குரிய தோழி அனிதா பிரதாப் அவர்கள்.
இன்றைக்கும் அனிதா பிரதாப் அவர்கள் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்வது வாடிக்கையாக கொண்டுள்ளார். வரலாற்று நாயகன் தம்பி அவர்களுடைய முதல் பத்திரிகை ஆங்கில பேட்டி வருவதற்கு அடியேன்தான் காரணம் என்பது மனதளவில் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
இதைவிட பதவிகளா முக்கியம். பதவியில் இருந்தவர்கள், இப்போது இருப்பவர்கள் இதைவிடவா சாதித்துவிட்டார்கள். வியாபார அரசியல், தான், தன்னலம் என்று கருதும் பதவியில் இருப்பவர்களைவிட இம்மாதிரி பொறுப்புகளை செய்வதில் கிடைக்கின்ற பேறு யாருக்கு கிடைக்கும். இது வரலாற்றுப் பதிவு அல்லவா?