கே.ஜி.எஃப். இயக்குநரின் படத்தில் புதிய அவதாரம் எடுக்கும், பிரபாஸ்..

 

“பாகுபலி” படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு தெலுங்கு நடிகர் பிரபாஸ், கதைகள் தேர்வில் தெளிவாக இருக்கிறார். இப்போது அவர் நடித்து வரும் மூன்று படங்களும் வித்தியாசமான களங்களில் உருவாகிறது.

நாக் அஷ்வின் இயக்கும் பெயரிப்படாத படம், சயின்ஸ் பிக்‌ஷன் படம், இதில் பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

ஓம் ராவத் இயக்கும் “ஆதிபுருஷ்” ராமாயணத்தை தழுவி எடுக்கப்படும் புராணப்படம், இதில் ராமபிரானாக நடிக்கிறார், பிரபாஸ்.

ராதாகிருஷ்ணகுமார் இயக்கும் “ராதே ஷியாம்” காதல் ரசம் சொட்டும் “ரொமாண்டிக்” ரகம்.

இந்நிலையில் கே.ஜி.எஃப். படத்தை இயக்கி பெரும் புகழ் பெற்ற இயக்குநர் பிரசாந்த் நீல் டைரக்ட் செய்யும் “சலார்” என்ற படத்தில் , பிரபாஸ் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

‘பான் இந்தியா’ படமாக உருவாகும், சலார் படத்தை விஜய் கிராகந்தூர் தயாரிக்கிறார்.

“படுபயங்கர ஆக்‌ஷன் காட்சிகளை உள்ளடக்கிய இந்த படத்தில் பிரபாஸ், புது அவதாரம் எடுக்க உள்ளார். இதுவரை பார்த்திராத பிரபாசை இதில் காணலாம்” என இப்போதே ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார், இயக்குநர் பிரசாந்த்.

– பா. பாரதி