டில்லி,

த்திய அரசின். ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டமான  ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக வரும் தகவல்களை தொடர்ந்து மாவட்ட கலெக்டர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை விடுத்துள்ளது.

அதில், மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில், பயனாளிகளைக் கண்டறிந்து பணம் வசூல் செய்வோர் மீது, நடவடிக்கை எடுக்க  மாவட்ட கலெக்டர்களுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது,

‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற, மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் பயன்பெறக்கூடிய பயனாளிகளைக் கண்டறிந்து, இத்திட்டத்தில் வீட்டுவசதி ஏற்படுத்தித் தருவதாகக்கூறி, சில நிறுவனங்கள் பணம் திரட்டுவதாக மத்திய அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற, தனி நபரையோ, நிறுவனத்தையோ மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை. இத்திட்டம் தொடர்பாக அனுமதியற்ற வகையில், பெயர், சின்னத்தை பயன்படுத்துவோர், தண்டனைக்குரிய நடவடிக்கைக்கு உள்ளாவர். இத்திட்டம் குறித்த விபரங்களை, மக்களிடம் எடுத்துச் செல்ல, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பணிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறையின் இணையதளத்தில், இத்திட்டத்தால் பயன் பெறக்கூடிய பயனாளிகள் நேரடியாக பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தவிர, மாநில அரசு, யூனியன் பிரதேசங்களின் பொது சேவை மையத்தில், மிக குறைந்த பதிவுக் கட்டணமாக, 25 ரூபாய் மற்றும் சேவை கட்டணம் செலுத்தி, இத்திட்டத்தில் பதிவுசெய்ய வழி செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பதிவு செய்ய, தங்களை மத்திய அரசின் அனுமதி பெற்ற நபர்கள் எனக்கூறி, தகவல்கள் மற்றும் பணம் திரட்டும் எந்த தனி நபர், நிறுவனங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். முறைகேடு செய்வோர் தொடர்பான தகவல் கிடைத்தால், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.