டெல்லி:

நாடாளுமன்றத்தில் பேசிய, பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர், கோட்சே தேசபக்தர் என்று கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில், பிரக்யா தாக்கூரை  பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து நீக்கிய மத்தியஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் சிறப்புப் பாதுகாப்புக் குழு சட்டத்திருத்த மசோதாவை உள் துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிமுகப்படுத்தி உரையாற்றினார் . இந்த சட்டத்திருத்த மசோதா குறித்த விவாதம் அவையில் நடைபெற்றது.

விவாதத்தின் போது பேசிய திமுக எம்.பி. ஆ. ராசா காந்தியைக் கொன்றதற்கு கோட்சே சொன்ன காரணத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். அதில் ”காந்தியின் மீது 32 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்குள் வன்மம் இருந்தது. அதன்பிறகே அவரை நான் கொலை செய்தேன். காந்தி ஒரு சார்பு கொள்கையுடையவர் என்பதால்தான் நான் அவரைக் கொன்றேன்” என்று கோட்சேவே ஒத்துக்கொண்டிருப்பதாக ராசா பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய  மத்திய பிரதேச மாநில பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான  பிரக்யா தாக்கூர், ”இந்த விவாதத்தில் நீங்கள் ஒரு தேச பக்தரை எடுத்துக்காட்டாக காட்ட முடியாது” என்று தெரிவித்தார்.

மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவை தேச பக்தர் என்று குறிப்பிட்ட எம்.பி. பிரக்யா தாக்கூருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பேசியது. இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பிரக்யா தாக்கூரின் பேச்சுக்கு சில பாஜக எம்.பிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், பிரக்யா தாக்கூரை, பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து நீக்கி பாஜக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், மீதமுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பிரக்யா தாக்கூரின் பேச்சுக்கு பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா  கண்டனம் தெரிவித்து உள்ளார்.