டெல்லி:

பாஜக எம்பி. பிரக்யா சிங், கோட்சேவை தேசபக்தர் என்று கூறிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் இன்று அமளி ஏற்பட்டது. பிரக்யா சிக்கின் கருத்துக்கு  எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்றத்தில் சிறப்புப் பாதுகாப்புக் குழு சட்டத்திருத்த மசோதாவை தொடர்பான விவாத்தின் போது, திமுக உறுப்பினர் ராஜா, மகாந்தி காந்தி, கோட்சே குறித்து பேசும்போது, குறுக்கிட்டு பேசிய பாஜக எம்பி பிரக்யா தாக்கூர், கோட்சே தேசபக்தர் என்று கூறினார்.

பிரக்யாவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மக்களவை கூடியதும், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பிரக்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய, சபாநாயகர் ஓம்பிர்லா, பிரக்யா சிங் பேசியது மக்களவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது, அதைப்பற்றி யாரும் விவாதம் செய்ய வேண்டாம்  என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால்,  இந்த விவகாரம் தொடர்பாக இன்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்தவேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.

ஆனால், அவைக் குறிப்பிலிருந்து பிரக்யாவின் கருத்து நீக்கப்பட்டுவிட்டதால், அவையை  ஒத்திவைத்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

இதை எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஏற்க மறுத்தனர். அப்போது குறுக்கிட்டு பேசிய, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரக்யா தாக்கூரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

ஆனாலும், அவரது கருத்தையும் ஏற்க மறுத்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் அமலியில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பு செய்தனர்.