புதுடெல்லி:

சாத்வி என்ற பெயரில் எம்பியாக பிரக்யா சிங் தாக்கூர் பதவியேற்றதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் மீண்டும் ஒரு முறை பதவிப் பிரமாணம் செய்யுமாறு தற்காலிக சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

வெற்றி பெற்ற எம்பிக்களுக்கு திங்களன்று தற்காலிக சபாநாயகர் விரேந்திரகுமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பிரக்யா, தன் பெயருடன் சாத்வி என்ற ஆன்மீக பெயருடன் சமஸ்கிருதத்தில் பதவி ஏற்றுக் கொண்டார். இறுதியில் பாரத் மாதா கீ ஜெ என முடித்தார்.

இதற்கு காங்கிரஸ் தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் பிரக்யா சிங் தாக்கூர் என்று பெயர் இருப்பதாகவும், தற்போது சாத்வி என்று சேர்த்துக் கொள்வதில் முரண்பாடு இருப்பதாகவும் கூறினர்.

இதனையடுத்து, தேர்தலில் அவர் தாக்கல் செய்த ஆவணங்களை தற்காலிக மக்களவை சபாநாயகர் விரேந்திரகுமார் ஆய்வு செய்தார்.

அதில் சாத்வி என்ற பெயர் இல்லை. இதனையடுத்து, சாத்வி என்பதை தவிர்த்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளுமாறு தற்காலிக சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து, சாத்வி என்ற பெயரை தவிர்த்து மீண்டும் பிரக்யா பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

கடந்த தேர்தலின் போது, மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் கர்கரே தனது சாபத்தால் தான் தீவிரவாத தாக்குதலில் இறந்ததாக பிரக்யா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேபோல், நாதுரான் கோட்ஸேவுக்கு ஆதரவாகவும், காந்திக்கு எதிராகவும் கூறிய கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடும் எதிர்ப்புக்குப் பின் வருத்தம் தெரிவித்தார்.

முதல்முறையாக எம்பி ஆகியிருக்கும் பிரக்யா, மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கை போபால் தொகுதியில் தோற்கடித்தார். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரக்யா மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.