தாத்தாவுக்காக எம் பி பதவியை ராஜினாமா செய்ய தயாரான பேரன்

ஹாசன், கர்நாடகா

தேவே கவுடாவை வெற்றி பெற வைக்க அவரது பேரன் தனது ஹாசன் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக கூறி உள்ளார்,

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் ஆளும் கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் முதல்வர் குமாரசாமியின் குடும்பத்தினர் மூவர் போட்டியிட்டனர். குமாரசாமியின் தந்தையும் மஜத தலைவருமான தேவே கவுடா தும்கூரு தொகுதியில் போட்டி இட்டார். குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி மற்றும் அண்ணன் மகன் பிரஜ்வால் ரேவண்ணாவும் போட்டி இட்டனர்.

மஜத போட்டியிட்ட தொகுதிகளில் ஹாசன் தொகுதியில் பிரஜ்வால் ரேவண்ணா மட்டும் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் பிரதமரான தேவே கவுடா தும்கூரு தொகுதியில் 13,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். நிகில் குமாரசாமி மாண்டியா தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுமலதா அம்பரீஷ் இடம் தோல்வியை அடைந்தார்.

இந்நிலையில் ஹாசன் தொகுதியில் வெற்றி பெற்ற பிரஜ்வால் ரேவண்ணா, “எனது தாத்தா தேவே கவுடா கர்நாடக மக்களுக்காக பல தியாகங்களை செய்துள்ளார். என்னால் அவர் தோல்வியை தாங்க முடியவில்லை. அவர் எங்கள் கட்சியின் முதுகெலும்பு போன்றவர். எனவே நான் எனது தொகுதியை அவருக்காக விட்டுக் கொடுத்து ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன்.

நான் கட்சி தொண்டர்களிடம் தேவே கவுடா மீண்டும் பதவியை அடைய உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அவர் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறார். அவர் தோல்வியால் கட்சியினர் துவண்டுள்ளனர். அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்க மீண்டும் தேவே கவுடா வெற்றி அடைய வேண்டும். அது வரை நான் வெற்றிக் கொண்டாட்டங்களை நிறுத்தி உள்ளேன்.

இது குறித்து நான் எனது தாத்தா தேவே கவுடா, சித்தப்பா குமாரசாமி மற்றும் என் தந்தை ரேவண்ணா ஆகியோருடன் ஆலோசிக்க உள்ளேன். நான் அவர்களை எனது முடிவுக்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என வற்புறுத்த உள்ளேன். எனக்கு தேவே கவுடா வெற்றி பெற்று மக்களுக்கும் மஜத கட்சியினருக்கும் மேலும் தொண்டு புரியவேண்டும் என்பதே விருப்பமாகும்” என தெரிவித்துள்ளார்.

மாண்டியா பகுதியை சேர்ந்த மஜத தலைவர் ஒருவர், “மாண்டியாவில் நாங்கள் தொடர்ந்து வென்று வந்தோம். ஒரு மூத்த அரசியல் தலைவரை அங்கு நிறுத்தி இருந்தால் தற்போதும் வென்றிருப்போம். குமாரசாமி மற்றும் ரேவண்ணா இடையில் உள்ள தலைமைக்கான போராட்டத்தில் இந்த தொகுதியை நாம் இழந்து விட்டோம்.

தற்போது தனக்கு கட்சி தலைமை கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரஜ்வால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி வருகிறார். இந்த தலைமுறையிலும் தலைமைக்கான தகராறு தொடர்கிறது. நிகில் குமாரசாமிக்கு எந்த காரணத்தை கொண்டும் தலைமை பதவி கிடைக்கக் கூடாது என்பதே பிரஜ்வாலின் திட்டம்” என கூறி உள்ளார்.