டில்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

டில்லியில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக வேட்பாளர் தேர்வில் மீனாக்ஷி லேகி, ஹர்தீப் சிங் பூரி மற்றும் பர்வேஷ் சிங் வர்மா ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். பெரும்பாலான பாஜக தொண்டர்கள், மீனாக்ஷி லேகிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், உரிய நேரத்தில் அது குறித்து முடிவெடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேக்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டில்லி பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”பாஜக சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும். டில்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்தவுடன், ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சி விரைவில் தேர்வு செய்யும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு ஆம் ஆத்மியும் மற்றும் காங்கிரஸ் கட்சி தான் பொறுப்பு. இரு கட்சிகளும் வன்முறைக்கு கண்டனம் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்திருக்கின்றனர். இந்த தேர்தல் உண்மைக்கும், பொய்மைக்கும் இடையிலான தேர்தல். தேசப் பற்றுக்கும், அராஜகத்திற்கும் இடையிலான தேர்தலாக இதை நான் பார்க்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களை முன்னிலைப்படுத்தி பாஜக நேர்மறையாக இந்த தேர்தலில் போட்டியிடும்” என்று தெரிவித்தார்.