மதமும் அரசும் சேர்ந்தால் இந்தியா இன்னொரு பாகிஸ்தான் ஆகும் : பிரகாஷ் ராஜ்

பெல்லாரி

தத்தையும் அரசையும் பாஜக ஒன்று சேர்த்தால் இந்தியாவும் பாகிஸ்தானைப் போல் ஆகிவிடும் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபகாலமாக பாஜக வை கடுமையாக விமர்சித்து வருகிறார்.  கர்நாடக மாநிலத் தேர்தல் தொடர்பாக அவர் பாஜகவுக்கு எதிராக பல கருத்துக்களை டிவிட்டரில் வெளியிட்டு வருகிறார்.  #சும்மா கேட்கிறேன் என்னும் தலைப்பில் அவர் அனைத்து தலைவர்களுக்கும் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்.   இவர் கங்காவதியில் இருந்து பெல்லாரி செல்லும் வழியில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அவர், ”நாம் தேர்ந்தெடுத்துள்ள பிரதிநிதிகளிடம் நாம் தொடர்ந்து கேள்வி கேட்க வேண்டும்.   நான் அரசியலில் இறங்கப் போவதால் கேள்விகள் கேட்பதாக சிலர் கூறுகின்றனர்.   நான் ஏற்கனவே அரசியலில் இருகிறேன்.  இதற்கு அரசியல் கட்சியில் உறுப்பினராக வேண்டிய அவசியம் இல்லை.  அரசியலைப் பற்றி அறிந்திருந்தாலே போதுமானது.

என்னுடைய ஒரே குறிக்கோள் மக்கள் எதையும் மறக்கக் கூடாது என்பதே.   பாஜக ஒரு விஷயத்தை மறக்கடிக்க மற்றொன்றை கிளப்பி விடுகிறது.   ஆனால் மக்கள் இது போல் திசை மாறி விடக் கூடாது.   என்னதான் திசை திருப்பினாலும் பாஜக அளித்து வரும் கஷ்டங்களை மக்கள் மறக்க மாட்டார்கள்.   அதனால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை.” எனக் கூறி உள்ளார்.

பாஜக வின் கர்நாடகப் பிரிவு தேர்தல் அதிகாரியிடம் ஒரு புகார் அளித்துள்ளது.  அதில், “குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் பிரதமர் மீதும் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா மீதும் தவறான கருத்துக்களை கூறி வருகின்றனர்.   அவர்களுடைய நற்பெயரைக் கெடுக்கும் வண்ணம் பேசி வருகின்றனர்” என குறிப்பிடப் பட்டுள்ளது.