தேர்தல் கமிஷனுக்கு நற்சான்று பத்திரம் வழங்கியுள்ள பிரணாப் முகர்ஜி!

புதுடெல்லி: இந்த 2019 மக்களவைத் தேர்தல் மிகச் சிறப்பான முறையில் நடத்தப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் கூறியதாவது, “நமது நாட்டின் நிறுவனங்களை நாம் வலுப்படுத்த வேண்டுமானால், அவை இந்த நாட்டில் சிறப்பாக சேவை செய்கின்றன என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

சுகுமார் சென் முதல் இன்றைய தேர்தல் ஆணையர் வரை, மிகவும் நல்லமுறையில் செயல்பட்டு, சிறப்பான முறையில் தேர்தலை நடத்துவதாலேயே இந்த நாட்டின் ஜனநாயகம் தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது.

அனைத்து தேர்தல் ஆணையர்களுமே ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டவர்களே. அவர்கள் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். நாம் அவர்களை விமர்சிக்க முடியாது. இந்த தேர்தல் நேர்மையான முறையிலேயே நடத்தப்பட்டது.

திறமையற்ற பணிசெய்வோரே தம்மிடமிருக்கும் உபகரணங்கள் குறித்து சண்டையிடுவார்கள். ஆனால், திறமையான பணிசெய்வோர், அந்த உபகரணங்களை எப்படி பயனுள்ள முறையில் பயன்படுத்துவது என்றே யோசிப்பர்” என பேசியுள்ளார் பிரணாப் முகர்ஜி.

தொடக்கம் முதல் முடிவு வரை, தேர்தல் கமிஷனின் செயல்பாட்டில் வெளிப்படையான பாகுபாடுகள் தெரியவந்த நிலையில், பிரணாப் முகர்ஜி பாராட்டியிருப்பது பலரின் புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது.