டெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமாவில் உள்ளார் என்று ராணுவ மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 10ம் தேதி டெல்லி  ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது மூளையில் சிறிய கட்டி அகற்ற செய்வதற்கான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட உடல் பரிசோதனையின் போது பிரணாப்புக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், சுவாச கோளாறு ஏற்பட வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலை எப்படி உள்ளது என்பது பற்றிய விவரங்களை மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கைகள் வாயிலாக வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பிரணாப்புக்கு நுரையீரல் தொற்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  சிறுநீரகங்களின் செயல்பாடுகள் குறைந்துள்ளது. அவர் தொடர்ந்து கோமா நிலையில் தான் உள்ளார். வெண்டிலேட்டர்  சிகிச்சை தொடர்ந்து தரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.