பீகார் : ஐக்கிய ஜனதா தளம் பிரசாந்த் கிஷோரை ஓரம் கட்டுகிறதா ?

பாட்னா

க்கிய ஜனதா தள துணை தலைவர் பிரசாந்த் கிஷோரை அக்கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் ஓரம் கட்டுவதாக கூறப்படுகிறது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் தேர்தல் பிரசார வல்லுனர் ஆவார். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார திட்டத்தை அமைத்து பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தி பாஜகவுக்கு வரலாறு காணாத வெற்றியை இவர் அளித்துள்ளார். மோடியின் வெற்றிக்கு இவரே முக்கிய காரணமாக இருந்தார்.

கடந்த ஆண்டு பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். அக்கட்சியில் அவருக்கு துணை தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்வில் பிரசாந்த் கிஷோரை ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் தமது கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர் என புகழ் மாலை சூட்டினார்.

அவ்வளவு புகழ்ந்த நிதிஷ்குமார் தற்போது பிரசாந்த் கிஷோரை ஓரம் கட்டுவதாக செய்திகள் வந்துள்ளன. இது கடந்த ஜனவரி முதலே தொடங்கி உள்ளது. அப்போது நிஷித்குமார் ஒரு பேட்டியில், “பிரசாந்த் கிஷோருக்கு அரசியலில் அனுபவம் இல்லை. ஆயினும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பரிந்துரைத்ததால் அவரை கட்சியில் இணைத்தேன்” என கூறினார். தற்போது பிரசாரக் குழுவில் பிரசாந்த் கிஷோரை நிதிஷ் குமார் சேர்க்க மாட்டார் என கூறப்படுகிறது.

பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டரில், “’பீகார் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு போராடும். ஐக்கிய ஜனதா தளத்தை பொறுத்தவரையில் தேர்தல் நிர்வாகம், பிரசாரம் உள்ளிட்டவற்றை மூத்த அரசியல் தலைவர் ஆர்.சி.பி. சிங் பார்த்துக் கொள்வார். எனது அரசியலின் ஆரம்ப கட்டமான இந்த சூழலில், இந்த தேர்தலில் நான் கற்றுக் கொள்ளவும், ஒத்துழைப்பு செய்யவும் போகிறேன்” எனக் கூறியது இதை உறுதிப்படுத்தி உள்ளது.

தற்போது ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரசார ஆலோசகராக பணியாற்ற பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதே வேளையில் பிரசாந்த் கிஷோரை அவருடைய சொந்தக் கட்சியினரே பிரசாரக் குழ்வில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.